நடிகர் விஜய்யின் அடுத்த மாஸ்டர் ப்ளான் - நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விஜய் மக்கள் இயக்கம்
’’நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில் ஆலோசனை கூட்டத்தில் ரசிகர்கள் மின் விளக்கை அணைத்து செல்போன் டார்ச் லைட்டை ஒளிர செய்து ஆதரவு’’

சமீப காலமாக நடிகர் விஜய் நடித்து வெளிவரும் படங்களில் அரசியல் கருத்துகள் முன் வைக்கப்படுகிறது. பெரும் சர்ச்சைகளை கிளப்பும் வசனங்கள், ஆளும் அரசியல் கட்சி நபர்களை விமர்சிக்கும் வகையிலும் இடம் பெறுவது வாடிக்கையாக இருந்தது, இதனால் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுகளும் அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது, அதிரடியாக எந்த ஒரு அரசியல் அறிவிப்பையும் வெளியிடாத விஜய் திரைப்படங்களில் மட்டும் மறைமுகமாக அரசியல் கருத்துகளை கூறி வந்தார். சட்டமன்ற தேர்தலில் விஜய் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சத்தமே இல்லாமல் பல்வேறு இடங்களில் வெற்றியை தட்டி சென்றனர். குறிப்பாக வார்டு உறுப்பினர் முதல் உள்ளாட்சி தலைவர் வரை போட்டியிட்டு அதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பலரும் வெற்றி பெற்றனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் 12 பேர் வரை வெற்றி பெற்று இருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் வெற்றி பெற்ற அனைவரையும் நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டத்தின் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த இளைஞரணி, மாணவரணி, விவசாயிகள் அணி, மீனவர் அணியினர் பங்கேற்று நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டனர். முன்னதாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 123 பேர் வெற்றி பெற்றதால், வர இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பேசினர். இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் மின் விளக்கை அணைத்து செல்போன் டார்ச் ஒளியை காண்பித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த வெற்றி நகர்மன்ற தேர்தலிலும் பிரதிபலிக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது,

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் ஆதரவை பொறுத்து விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றவும், நேரடி தேர்தல் அரசியலில் இறங்கவும் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"We stand with surya" : சூர்யாவுக்கு ஆதரவாக நிற்கும் இயக்குநர் ரஞ்சித்...!





















