"நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதி உறுதி.. அது 400 தொகுதிகளாக மாறவேண்டும்" -கி.வீரமணி.
குஜராத் மாடல் ஆட்சியில் பெண்கள் கையில் சட்டி, பானை உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் உள்ளது.
திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எதிரான பரப்புரை பொதுக்கூட்டம் சேலம் மாநகர் அம்மாபேட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பொதுமக்கள் இடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி முடிய உள்ள சூழ்நிலையில், மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது. இது ஜனநாயகமா? கல்லூரிக்கு செல்ல வேண்டிய பருவத்தில் குலக்கல்வி என்ற பெயரில் படிப்பிற்கு தடை விதிக்க பாஜக முயற்சிக்கிறது. குழி தோண்டி புதைக்கப்பட்ட பிணத்தை மீண்டும் எடுத்து சிங்காரித்து நடைமுறைப்படுத்துவதே குலக்கல்வி திட்டம். குஜராத் மாடல் ஆட்சியில் பெண்கள் கையில் சட்டி, பானை உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் உள்ளது. மக்கள் அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நீட் விளக்கு குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்கள் செய்து வருகின்றனர். நீட் தேர்வு ஆபத்தானது என்று முதன் முதலில் தமிழகத்தில் சொன்னது திராவிட இயக்கம். நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பாஜக ஆட்சி விரைவில் முடியப் போகிறது இன்னும் ஆறு மாதங்களில் மீண்டும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். அனைத்துக்கும் அதன் பின்னர் தீர்வு கிடைக்கும். தங்களுக்கு தோல்வி உறுதி என்ற பயத்தில் பாஜக உள்ளது. இந்தியா கூட்டணி தான் 2024 இல் வெற்றி பெறபோகிறது. எனவே தான் இந்தியா என்பதே வேண்டாம் பாரத் என்கிறார்கள். இந்தியா என்று உச்சரிக்கவே பயப்படுகிறார்கள். பழைய கள், புது மொந்தை என்பது போல, குலக்கல்வி திட்டம் தான் விஸ்வகர்மா யோசனா. கள் என்றால் கூட போதை தெளிந்துவிடும். ஆனால் இது விசம் என்றார்.
தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறை உள்பட பல்வேறு பிரச்னைகள் தற்போது உள்ளது. குறிப்பாக கலைஞர் காலத்தைவிட மோசமான காலமாக தற்போது நிலவும் போதும் அவற்றையெல்லாம் புறக்கக்கூடிய முதலமைச்சராக திகழ்கிறார். எதையும் முறியடிக்கும் திறமையான முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின். படி, படி என்று சொல்வதற்கு ஒரு இயக்கம், திராவிட இயக்கம். படிக்காதே, படிக்காதே என்று சொல்வதற்கு ஒரு இயக்கம், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வகர்மா யோஜனா என்பது தொழில் வளர்ச்சிக்காக அல்ல. ஜாதி தொழிலை வளர்ப்பதற்காக ஜாதி பெயர்களை, ஜாதி படங்களை போட்டு வெளியிட்டுள்ளார்கள் இது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். மேலும், தமிழக ஆளுநர் ஒரு மனநோயாளி போல் ஆரியம், திராவிடம் என திரும்ப திரும்ப பேசி வருகிறார். இப்படி அவர் தொடர்ந்து பேசி ஆட்சிக்கு விளம்பரம் செய்வதோடு மக்கள் உணர்ச்சியை உண்டாக்குகிறார் என்பதால்தான் அவர் தேர்தல் வரை பொறுப்பில் நீடிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதி உறுதியாகிவிட்டது. அது 400 தொகுதிகளாக மாறவேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும்" என்றும் அவர் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய முஸ்லிம் லீக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ALSO READ | Kerala Blast: கேரளாவில் கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு.. ஒருவர் உயிரிழப்பு