விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் சார்பில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல்
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கடந்த 30 ஆம் தேதி கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது பல்வேறு பகுதிகளில் அதி கனமழையை கொட்டி தீர்த்தது. கரையை கடந்த பிறகு, வலுவிழந்த புயல் சென்ற பாதையெல்லாம் வரலாறு காணாத மழையை கொட்டித் தீர்த்தது. மேலும் ஃபெஞ்சல் புயல் சென்னையை புரட்டி போடும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், யாரும் எதிர்பாரா வண்ணம் புயல் பாண்டிச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இன்றளவும் விழுப்புரம் மாவட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலை காணப்படுகிறது.
மத்திய அரசிடம் நிவாரணம் கோரிய முதல்வர்
இந்த சூழலில் மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் தரக்கோரி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். எனினும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் தேசிய பேரிடர் நிதியில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். சென்னை டிபி சத்திரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்.
மயிலாடுதுறை தவெகவினர்
இந்நிலையில் அதனை தொடர்ந்து பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு மயிலாடுதுறையில் இருந்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய சூழலில் குறிப்பாக இந்த புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மயிலாடுதுறையில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
3 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள்
அக்கட்சியின் மாவட்ட தலைவர் குட்டிகோபி ஏற்பாட்டில் அரிசி, பாய், போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை புறப்பட்ட வாகனத்தை கட்சியின் மாவட்ட தலைவர் குட்டி கோபி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள தவெக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விமர்சனம்
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகின்றனர். ஆனால், விஜய் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது சென்னை மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துள்ள விஜய், விரைவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களையும் நேரில் சந்தித்து உதவிகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிகனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அவர் நிவாரணப் பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.