மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயாவில் பட்டுபாவாடை, வேட்டி சட்டை அணிந்து, தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றிய பள்ளி மாணவ, மாணவிகள்....!
திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களைகட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி முதல்வர் வல்லபன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய உடையில் குழந்தைகள்
பொங்கல் விழாவில் பள்ளி, மாணவ மாணவிகள் பாரம்பரிய உடைகளான பட்டுப்பாவாடை, மாணவர்கள் வேட்டி, சட்டை என புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். பின்னர் தாழை, நாணல், பூக்களால் கோலங்கள் வரைந்து, செங்கரும்பு நட்டு, தோரணங்கள் கட்டி அலங்கரித்து பொங்கலோ பொங்கல்..! என்று உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த பொங்கல் விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் தமிழர்களின் கலாச்சார உடையணிந்து கலந்து கொண்டனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி
மத்திய அரசின் கல்வித்துறையில் கீழ் தனித்து இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ பாடத்தில் பால்வதிகா திட்டத்தின் கீழ் ப்ரீகேஜி, எல்கேஜி மற்றும் யூகேஜி தொடங்கி 12 -ம் வகுப்புகள் வரை கற்பிக்கப்படுகிறது. மத்திய அரசின் மனித வளத் துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்குவதால், அங்கு கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. எனவே இப்பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க பெரிய அளவில் போட்டி நிலவுகிறது.
இந்தியா முழுவதும் 1,199 பள்ளிகள்
மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் மாணவா்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதும் இப்பள்ளியின் கூடுதல் சிறப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 1,199 பள்ளிகளும், இவற்றில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் 32 முதல் 40 மாணவா்கள் வரை சோ்க்கப்படுகிறாா்கள்.
அரசு ஊழியா்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை, இதில் 25 சதவிகித இடங்கள், கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆா்.டி.இ) சோ்க்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் மூன்று பிரிவுகள் உள்ளதால், 30 இடங்கள் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரப்பப்படுகின்றன.
முன்னுரிமை
இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சோ்க்கும் 25 சதவிகித இடங்கள் போக, மீதமுள்ள 75 சதவிகித இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோரின் குழுந்தைகள் முன்னுரிமை அளித்துச் சோ்க்கப்படுகின்றனா். குறிப்பாக, அடிக்கடி பணியிடமாற்றம் செய்யப்படுவோரின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும், மாநில அரசில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

