TN 10th Result 2024: மயிலாடுதுறையில் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த 6 மாணவர்கள் - யார் இவர்கள்? விபரம் உள்ளே...!
10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 நரிக்குறவர் இன மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதிக்கும் நரிக்குறவர் (ஆதியன்) இன மக்கள்
பெரும்பாலும் நரிக்குறவர்கள் (ஆதியன்) மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை சிக்கல் உள்ளதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற பல இன்னல்களை கடந்து ஒரு சில மாணவர்கள் மற்ற சமூகத்தினர் போன்று தங்களையும் கல்வி மூலம் வளர்த்துக் கொள்ள, பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். கல்வி பயில்வது மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளே உறைந்திருக்கும் மற்ற திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
நரிக்குறவ சமுதாய மக்களுக்கான பிரத்தேக பள்ளி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ சமுதாய மக்கள் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நாடோடிகளாக சுற்றித்திரியும் இப்பகுதி நரிக்குறவர்கள் சமுதாய மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012 -ஆம் ஆண்டு உண்டு உறைவிடப் பள்ளி அங்கு தொடங்கப்பட்டது. 10 மாணவர்களுடன் மட்டும் தொடங்கிய இப்பள்ளியில் தற்போது 120 -க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் 2012- இல் படித்த மாணவர்கள் பலர் தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும் இவர்கள் குத்துச்சண்டை, யோகா என பல்வேறு துறைகளிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெற்றும் வருகின்றனர்.
பொதுத்தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நரிக்குறவர் இன மாணவர் வீரசிவாஜி பன்னிரண்டு வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவ மாணவிகள் வெண்ணிலா, அர்ஜுன், சக்தி, தனலெட்சுமி, சஞ்சய், ஈஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை உண்டு உறைவிடப்பள்ளி மையத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர். மேலும் அந்த மாணவர்கள் கூறுகையில் எங்கள் இன மக்கள் இதுபோன்று படித்து உயர வேண்டும் கேட்டுக்கொண்டனர். இதன்மூலம் கல்வியறிவு இன்றி இருந்துவந்த நரிக்குறவர் இன (ஆதியன்) மக்கள் விழிப்புணர்வு அடைந்து, வருங்காலங்களில் அவர்கள் 100 சதவீதம் கல்வியறிவை பெற்று சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு வரும் சூழலில் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட தேர்ச்சி விபரம்
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 5744 மாணவர்கள், மாணவிகள் 5805 என 11,549 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 4975 மாணவர்களும், 5474 மாணவிகள் என மொத்தம் 10,449 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.61 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.30 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.48% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 86.31 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 90.48 சதவீதம் எடுத்து 4.17 சதவீதம் அதிகம் ஆகும். மாநில அளவில் 27 வது இடம் பெற்றுள்ளது. 497 மதிப்பெண்கள் எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும், அரசு உயர்நிலைப் பள்ளி ஆத்தூர், மயிலாடுதுறை மாவட்ட அரசு மாதிரி பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மேல நல்லூர், அரசு மேல்நிலைப்பள்ளி வில்லியநல்லூர், அரசு உயர்நிலைப்பள்ளி சந்தரபாடி, அரசு உயர்நிலைப்பள்ளி திருவாலி, அரசு உயர்நிலைப்பள்ளி வடகரை, அரசு உயர்நிலைப்பள்ளி திட்ட்படுகை, அரசு உயர்நிலைப்பள்ளி பெருமாள் பேட்டை உள்ளிட்ட 9 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.