சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்: குழந்தை திருட்டு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் தொடர்ந்து செல்போன்கள் திருடப்படும் சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சீர்காழியில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை, அப்பகுதி மக்களின் முக்கிய மருத்துவ மையமாகத் திகழ்கிறது. சீர்காழி நகரம் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாள்தோறும் இந்த மருத்துவமனைக்குப் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்களின் உயிர் காக்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், தற்போது நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரவு நேரங்களில் அதிகரிக்கும் மர்மநபர்களின் நடமாட்டம்
கடந்த சில வாரங்களாகவே சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இரவு நேரங்களில் மர்மநபர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவியாக இரவில் தங்கியிருக்கும் உறவினர்களைக் குறிவைத்து இந்தத் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பகல் முழுவதும் நோயாளிகளைக் கவனித்துவிட்டு, இரவு நேரங்களில் களைப்பில் மருத்துவமனை வராண்டாக்களிலும், வார்டுகளின் வெளிப்புறத்திலும் அயர்ந்து தூங்குபவர்களை நோட்டமிடும் மர்மநபர், அவர்களிடம் இருக்கும் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் உடைமைகளைத் திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் அலட்சியம் காட்டப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தாய்க்குத் துணையாக வந்த இளைஞரின் செல்போன் திருட்டு
இந்நிலையில், சீர்காழி பகுதியைச் சேர்ந்த சுமார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாயாரைச் சிகிச்சைக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். தாயாருக்குத் துணையாக மருத்துவமனையிலேயே தங்கியிருந்த அந்த இளைஞர், இரவு நேரத்தில் வார்டுக்கு வெளியே உள்ள வெளிப்புற வராண்டாவில் படுத்துத் தூங்கியுள்ளார்.
அப்போது அங்கு நைசாக நுழைந்த மர்மநபர் ஒருவர், இளைஞர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அவரிடமிருந்த சுமார் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போனைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதிகாலையில் கண்விழித்துப் பார்த்த அந்த இளைஞர், தனது செல்போன் மாயமாகியிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.
சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல் நிலையத்தில் புகார்
தனது செல்போன் திருடு போனதை அறிந்த அந்த இளைஞர், உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி, வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். இளைஞரின் தொடர் வற்புறுத்தலைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சிசிடிவி காட்சிகளைப் போட்டுக் காட்டினர். அதில், இரவு நேரத்தில் மருத்துவமனை வராண்டாவிற்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் நுழைந்த மர்மநபர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த இளைஞரின் செல்போனைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
உடனடியாக அந்த சிசிடிவி காட்சிகளைத் தனது மற்றொரு செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து ஆதாரமாகத் திரட்டிய அந்த இளைஞர், சீர்காழி காவல் நிலையத்திற்குச் சென்று திருட்டுச் சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். அத்துடன், தான் சேகரித்த சிசிடிவி வீடியோ ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்து, திருடனை விரைந்து கைது செய்து தனது செல்போனை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பை உறுதி செய்யப் பொதுமக்கள் கோரிக்கை
அரசு மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் பொது இடத்தில், இரவு நேரங்களில் எந்தவித அச்சமுமின்றி மர்மநபர்கள் உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபடுவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது செல்போன் திருட்டுடன் நின்று கொண்டிருக்கும் இந்தச் சமூக விரோதிகளின் செயல்பாடுகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளின் நகைகளைப் பறிப்பது அல்லது பச்சிளம் குழந்தைகளைத் திருடிச் செல்வது போன்ற மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, சீர்காழி அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பாதுகாப்பை பலப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகக் கூடுதல் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செல்போன் திருட்டில் ஈடுபடும் மர்மநபரைக் காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்கி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நோயாளிகளும் பொதுமக்களும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























