Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கைது செய்தனர்

பெண் ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது ஆட்சியர் புகாரளித்த நிலையில், 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி ஸ்ருஷ்டி சிங்கையும், கண்காணிப்பு அதிகாரியாக ஐஜி காமினியையும் நியமித்த உயர்நீதிமன்றம் டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பாக அறிக்கையளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து காவல்துறை தரப்பில் தவெக எம்.எல்.ஏவுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
தவெக எம்.எல்.ஏ அதிரடியாக கைது
இந்நிலையில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் வீட்டின் முன்பாக சில நாட்களாக போலீசார் குவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கைது செய்தனர்.அவரின் மீது பாலியல் நோக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளுக்கான குற்றம்,பாலியல் ரீதியிலான ஆபாசக்கருத்துகள் தெரிவித்தல், தவறான நோக்கத்துடன் பின் தொடர்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பணியிடத்தில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ பதவி பறிபோகுமா?
ஏற்கனவே தவெக அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் சமீபத்தில் கொளத்தூர் எம்.எல்.ஏ காலமானார். இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பதவி பறிபோகுமா என்ற கேள்வி பிரதானமாக எழுந்துள்ளது. இந்நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாலோ அல்லது அவர் சிறையில் அடைக்கப்பட்டாலோ, அதனால் மட்டுமே அவரது பதவி பறிபோகாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே, அருள் விக்னேஷின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும்.
ட்ரெண்டிங் செய்திகள்























