மயிலாடுதுறையில் சாலையில் சென்ற ஒட்டு மொத்த பேரும் ஹெல்மெட் அணிந்து சென்ற அதிசயம். இது எப்படி சாத்தியம்..? விபரம் உள்ளே....!
மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒரே நேரத்தில் 500 -க்கும் மெற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்தியில், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்பதை நோக்கமாக கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு முதல் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக செல்வது, வாகனங்களுக்கு இடையில் முறையான தொலைவு இடைவெளி இல்லாமல் செல்வது மற்றும் டிரைவிங்கின் போது உடல்நல கோளாறுகளால் ஏற்படும் அசவுகரியம் அல்லது கவனக்குறைவு, போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது, சோர்வு உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
வாகன ஓட்டிகள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாக பயன்படுத்தாமல் அல்லது வேறு வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலை நிலைமைகளும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன. இந்நிலையில் நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாடு அரசின் விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024 ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழா மயிலாடுதுறை அனுசரிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக 35 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடந்த ஜனவரி 15 -ம் தேதி முதல் நேற்று பிப்ரவரி 14 -ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதற்காக மாவட்ட காவல் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான பிரச்சார நிகழ்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவேரி நகரில் துவங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார். சாலை விபத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1433 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 304 பேர் இறந்துள்ளதாகவும் 1559 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு சாலைபாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகை மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பாடல் வழியாக வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
சாலையில் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் விபத்தினை தவிர்க்கும் வகையில் சிக்னல் விதிகளை மதிக்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைககளுடன் போக்குவரத்து காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, குற்றவியல் போலீசார், வாகன விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் என 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலையில் ஒரே நேரத்தில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்த பேரணியில் நிறைவாக போக்குவரத்து காவலர் சதீஸ் என்பவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து மயிலாடுதுறை மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வலியுறுத்தி தான் எழுதிய “நாலுபக்க வாகனம்-நீ எந்த பக்கம் போகனும் சாலையில் உள்ள காவலரின் செய்கைகளை பார்க்கனும், வாகனம் ஓட்டும் முன்னே ஓட்டுநர் உரிமம் வாங்கனும்” என்ற பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.