காரைக்கால்: டிட்வா புயல் எச்சரிக்கை! கனமழை, மீட்புப் பணிகள் தீவிரம் - அமைச்சர் திருமுருகன் அதிரடி உத்தரவு!
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயலை பாதிப்புகளை சமாளிக்க அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

காரைக்கால்: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயலின் தாக்கத்தால், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மற்றும் பலத்த கடல் சீற்றம் காணப்படுவதால், எந்தவொரு பேரிடர் சூழலையும் சமாளிக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வருக
புயலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோர மீனவ கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) அவசரமாக காரைக்காலுக்கு விரைந்து வந்துள்ளனர். மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்தடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட சார்பு ஆட்சியர் பூஜா, முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், துணை ஆட்சியர் (பேரிடர்) வெங்கடகிருஷ்ணன், துணை ஆட்சியர் (நிர்வாகம்) செந்தில்நாதன், தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுபம் சுந்தர் கோஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் சந்திரசேகரன், வட்டாட்சியர்கள் செல்லமுத்து, சண்முகானந்தம், துணை வட்டாட்சியர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தின் போது, அமைச்சர் திருமுருகன் அதிகாரிகளுக்குப் பல முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தார். “டிட்வா புயலின் பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழுத் தயார் நிலையில் இருக்க வேண்டும். எந்த ஒரு பொதுமக்களின் புகாராக இருந்தாலும், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலே பேரிடரை எதிர்கொள்வதில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'டிட்வா புயல்' காரணமாக நேற்று இரவு முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. எனினும், மழை தொடங்குவதற்கு முன்பே அதிக மழைநீர் தேங்கும் பகுதிகளிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் முறையாகத் தூர்வாரப்பட்டதால், தற்பொழுது பெரிய அளவில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் தூர்வாறப்படாத ஒருசில பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை நகராட்சி ஊழியர்கள் மூலம் வடிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, கனமழையானது மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதால், மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் பேரிடரை எதிர் கொள்வதற்காக தயார் நிலையில் உள்ளன.
மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து முப்பது பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் காரைக்காலுக்கு விரைந்து வந்துள்ளனர். இவர்களுடன் காரைக்கால் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கும் தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்ட முழுவதும் 91 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது செய்து வருகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கு 1070 மற்றும் 1077 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்,” என அமைச்சர் தெரிவித்தார்.
கடலோரக் கிராமங்களில் நேரில் ஆய்வு
ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக்கொண்ட அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன், சார்பு ஆட்சியர் பூஜா மற்றும் இதர அதிகாரிகளுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரையும் அழைத்துக்கொண்டு காரைக்கால் மாவட்டத்திலுள்ள கடலோர கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளையும், வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். அடைப்பு கண்டறியப்பட்ட வாய்க்கால்களில் உடனடியாக அடைப்புகளை அகற்றி நீரை வெளியேற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் துரிதமாக இணைந்து பணியாற்றினர். புயல் முடியும் வரை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாகத் தொடரும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.






















