தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!
வீட்டை கொடுக்கச் சொல்லி ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து மறுத்த குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து வீட்டை சுற்றி வேலி அமைத்த கொடுமை மயிலாடுதுறை அருகே அரங்கேறியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வீட்டை கொடுக்கச் சொல்லி ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து மறுத்த குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து வீட்டை சுற்றி வேலி அமைத்த தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நில தகராறு
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த கல்யாண சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் கடந்த பெண்மணி 2012 -ஆம் ஆண்டு கலா என்பவரிடம் இருந்து நிலத்தை வாங்கி அங்கே வீடு கட்டி வசித்து வருகிறார். அமுதா பெயரில் நிலத்தின் உரிமை பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தில் தனக்கு உரிமை இருக்கிறது என்று கூறி அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் அமுதா குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்
இது தொடர்ந்து 2019 -ஆம் ஆண்டு கிராம பஞ்சாயத்தில் அமுதாவிற்கு அபராதம் விதித்ததுடன், நிலத்தை சுரேஷ்குமாருக்கு கொடுக்கச் சொல்லி தீர்ப்பு சொல்லியுள்ளனர். கட்டப்பஞ்சாயத்தை ஒத்துக் கொள்ளாத அமுதாவை, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லியுள்ளனர். இதன் காரணமாக ஊரில் உள்ள கோயிலுக்கு கூட செல்ல கூடாது என்று ஊர் கட்டுபாடு விதித்ததுடன் அமுதாவின் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்கும் ஊரைச் சார்ந்த யாரும் வரக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.
Sunil Chhetri:"ஆல் ஏரியாவுலையும் அண்ணன் தான் மாஸ்" - ஐஎஸ்எல் வரலாற்றில் சுனில் சேத்ரி புதிய சாதனை!
கண்டுகொள்ளாத காவல்துறை
இதுகுறித்து மணல்மேடு காவல்நிலையத்தில் அமுதா பலமுறை புகார் தெரிவித்ததாகவும், ஆனால் அவர் அளித்த புகாரில் எவ்விதமான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் எடுக்காமல் இருந்து வருவதாக அமுதா தரப்பினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 25 -ஆம் தேதி அமுதா வீட்டிற்கு சுரேஷ்குமாரின் ஆதரவாளரான முத்தமிழன் என்பவர் 15 அடி ஆட்களுடன் வந்து தகராறில் ஈடுபட்டு, தொடர்ந்து அமுதாவின் வீட்டைச் சுற்றி முள்வேலி அமைத்துள்ளார். இதனால் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.
ஆட்சியரிடம் முறையீடு
இந்த சூழலில் அமுதாவின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும், அப்போது அடியாட்களுடன் வந்து அக்குடும்பத்தை சுரேஷ்குமார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது தாக்குதலுக்கு ஆளான அமுதா மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மருத்துவமனை வந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அமுதா வேதனையுடன் தெரிவித்த நிலையில் இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஊர் கட்டப்பஞ்சாயத்துகள் சட்டபடி தவறு என்றாலும், இன்னும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக இருந்து, அதன் மூலம் பல குடும்பங்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாகவும், இதனை அரசு குழு அமைத்து கண்காணித்து பாதிக்கப்படும் மக்களை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர் சங்கமித்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.