நாடாளுமன்ற தேர்தலில் இந்த அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் - எச்சரிக்கை விடுத்த ஆசிரியர்கள் சங்கம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆசிரியர்களின் போராட்டங்கள்:
சமீபகாலமாக தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பணிகளை குறைத்தல் போன்றவைகள் ஆசிரியர்களின் போராட்டத்தில் முதன்மையான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன. ஒருபுறம் சம வேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதேபோல், பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர் சங்கங்களும், பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம், புதிய ஒய்வூதியத் திட்ட (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதுதவிர தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உட்பட பல சங்கங்களும் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டு வருவது பள்ளிக்கல்வித் துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஆசிரியர் இயக்கங்களின் இந்த போராட்டங்கள் தொடரும்பட்சத்தில் அது மாணவர்களின் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டுமென கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதி:
அதேநேரம் இந்த போராட்டங்களுக்கு மையமாக இருப்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்தான் என கூறப்படுகிறது. காரணம், ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் 85 சதவீதத்துக்கும் மேலானவை தேர்தல் வாக்குறுதிகள் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆதரவு தெரிவித்த அம்சங்களாக இருந்துவருகிறத. இதனால் சாத்தியமற்ற கோரிக்கைகளைகூட ஆசிரியர் சங்கங்கள் முன்வைக்கும்போது அதனை மறுக்க முடியாத நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மயிலாடுறையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243 ஐ உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு அக்டோபர் 12 -ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் டிட்டோ - ஜாக் உயர்மட்ட குழு உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளை எழுத்துப்பூர்வ ஆணையாக உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் முழங்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர் மன்றத்தின் மாநில தலைவர் ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது, 243 அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர்களிடம் டிட்டோ - ஜாக் மூலம் பேசி ஏற்றுகொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியீட வேண்டும். இவற்றை உடனடியாக செய்யாவிட்டால் வருகிற பிப்ரவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் டிட்டோ -ஜாக் சார்பாக நடத்துவோம். தொடக்கல்வி ஆசிரியர்கள் தான் இந்த அரசாங்கம் அமைய முழு காரணம் இருந்து, ஓட்டு வங்கிகளாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த அரசு பாதிப்புகளை ஏற்படுத்தினால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கிறோம். ஆகையால் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த உண்ணாவிரதப் போராட்ட கோரிக்கை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்றார்.