அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
மயிலாடுதுறையில் 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் 2 போதைப்பொருள் வியாபாரிகள் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 2 எதிரிகள் என மொத்தம் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தகைய தீவிர நடவடிக்கைகளின் மூலம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தவும் காவல் துறை தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
பொதுமக்களை அரிவாள் மிரட்டிய ரெளடிகள்
மயிலாடுதுறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி, கையில் அரிவாள் மற்றும் கத்திகளுடன் சுற்றித் திரிந்த சிலர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தச் சமயத்தில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர், இது குறித்து உடனடியாக புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் வழக்கை தீவிரமாகப் புலனாய்வு செய்து, பொதுமக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த முக்கையா என்பவரின் மகன் முத்துபாண்டி (26), தேவேந்திரன் என்பவரின் மகன் அம்மாயி என்ற பாரதி (29) மற்றும் ராஜேந்திரன் என்பவரின் மகன் ரஞ்சித் (30) ஆகிய மூன்று நபர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார். இவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் போக்கிரி சரித்திர பதிவேடு தொடரப்பட்டு, காவல்துறையினரால் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்த நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா மற்றும் குட்கா வேட்டை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட கீழையூர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி காவல்துறை சிறப்புப் படையினர் அங்கு அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் அஸ்ரப் அலி (50) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோன்று பொறையார் காவல் சரகத்திற்குட்பட்ட ஆத்துபாக்கம் பகுதியில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்காவைச் சட்டவிரோதமாக விற்பனை செய்த திருக்களாச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் மதன்கார்க்கி (42) என்பவரை பொறையார் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு: பாய்ந்த குண்டர் சட்டம்
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த மேற்படி 5 நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. சினோஹா பிரியா பரிந்துரை செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 19.08.2026 அன்று மேற்படி 5 நபர்களையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, 20.08.2026 அன்று முத்துபாண்டி, அம்மாயி (எ) பாரதி, ரஞ்சித், அஸ்ரப் அலி மற்றும் மதன்கார்க்கி ஆகிய ஐந்து எதிரிகளும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் முறைப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடப்பாண்டில் 39 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட 39 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதில் கொலைக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 நபர்கள், பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்த 12 நபர்கள், மதுவிலக்குக் குற்றங்களில் ஈடுபட்ட 7 நபர்கள், கஞ்சா விற்பனை வழக்குகளில் தொடர்புடைய 12 நபர்கள், குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஒரு நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 2 நபர்கள் என மொத்தம் 39 பேர் அடங்குவர்.
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டமும் செயல்பாடுகளும் காவல்துறையினரால் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் குற்றங்களைச் புரிபவர்கள், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கள்ளச்சாராயம் மற்றும் மதுவிலக்குக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்வித தயவுமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















