வீட்டை காலி செய்யக்கோரி காவல்துறையினர் மிரட்டுவதாக தாய், மகள் மனு - மயிலாடுதுறையில் பரபரப்பு
போலி ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரித்து விட்டதாக தாய், மகள் குறைதீர் கூட்டத்தில் கண்ணீ மல்க மனு அளித்த சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி அப்புராஜபுத்தூரை சேர்ந்தவர் அமிர்தராஜன் என்பவரின் மகள் அபிநேஷா. இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையினர் மீது புகார் தெரிவித்து மனு ஒன்று அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2005 -ம் ஆண்டு தான் 8-ம் வகுப்பு படித்தபோது விபத்தில் கழுத்து மற்றும் தலையில் அடிப்பட்டு காயமடைந்தேன். எனது சிகிச்சைக்காக தனது தந்தை அமிர்தராஜன் தஞ்சை மாவட்டம் குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி, மாதம் 3 ஆயிரம் வீதம் வட்டிகொடுத்து வந்தார்.
அதற்காக நிரப்பப்படாத கையெழுத்து போட்ட வங்கி காசோலை, உள்ளிட்ட சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிகொண்டு பணம் கொடுத்தனர். அதற்காக இரண்டரை ஆண்டுகள் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டியே கட்டியுள்ளார். அதன் பிறகு அசலை திருப்பிகொடுக்க முடியாத நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு காரில் வந்து எனது தந்தையை கடத்தி சென்று அவரிடமிருந்த 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டதோடு, கிரய சாசனம் ஒன்றில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதில் எங்களது வீட்டை ராமலிங்கத்திற்கு 6 லட்சத்திற்கு கிரயம் செய்ததாகவும், அதற்காக 5 லட்சம் பணத்தை பெற்றுகொண்டதாகவும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் சொத்தை பதிவுசெய்து கொடுக்க வேண்டி வழக்கு தொடர்ந்து அதில் போலியான ஆவணங்களை கொடுத்து நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர். இதனால் எங்கள் வீட்டை காலிசெய்ய சொன்னதால் உறவினர் வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டை காலிசெய்து சாவியை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று பொறையார் காவல்துறையினர் எங்களை மிரட்டி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் புகார் அளித்தேன் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது எனது வீட்டை இழந்து நடுத்தெருவில் நிற்பதாகவும், போலி ஆவணங்களை கொடுத்து எங்கள் வீட்டை அபகரித்தவர்களிடம் இருந்து இழந்த வீட்டை மீட்டு கொடுப்பதோடு, அவர்கள் எங்களை தொடர்ந்து கொலைமிரட்டல் விடுத்துவருவதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.