போலீசுக்கே அரிவாள் வெட்டா...? என்னங்க சொல்றீங்க....?
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை.

மயிலாடுதுறை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தொடரும் மது கடத்தல்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு அருகே அமைந்துள்ளது மயிலாடுதுறை மாவட்டம். ஆகையால் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானம் தமிழ்நாட்டை விட விலை குறைவு மற்றும் மது வகைகளும் அதிகம் என்பதால் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மதுபானங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடத்தப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட எல்லை பகுதிகளில் பல இடங்களில் மாவட்ட காவல்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மது கடத்தலை தடுக்கும் பொருட்டு நாள்தோறும் 24 மணிநேரமும் சோதனை நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக மது கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காவல்துறையினர் வாகன தணிக்கை
இந்த சூழலில் கடந்த 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி பாலையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் காசிநாதன் மற்றும் காவலர்கள் மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த குத்தாலம், சோழம்பேட்டையை சேர்ந்த மேகநாதன் என்பரது 28 வயதான குமார் என்பவரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். சோதனையில் குமார் சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மது பாட்டில்களை தனது இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது காவல்துறையினரின் சோதனையில் தெரியவந்தது.
எஸ்எஸ்ஐயை கொலை செய்ய முயற்சி
இதனை அடுத்து போலீசாரிடம் இருந்து குமார் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். உடனடியாக சுதாரித்து கொண்ட காவல்துறையினர் தப்பியோட முயன்ற குமாரை லாவகமாக வளைத்து பிடித்தனர். அப்போது எதிர்பாராத நேரத்தில் குற்றவாளி குமார் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறப்பு உதவி ஆய்வாளர் காசிநாதனை என்பவரை தாக்கி கொலை செய்ய முயற்சித்து அவரது இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து மற்ற காவலர்கள் குமாரிடம் இருந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காசிநாதனை மீட்டு குமாரை கைது கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் காசிநாதன் பாலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.
மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை
அதன் பேரில் அப்போதைய பாலையூர் காவல் நிலைய ஆய்வாளர் காவேரி குற்ற வழக்கு பதிவு செய்தும் எதிரியை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேற்படி வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நிறைவுற்ற நிலையில் இவ்வழக்கினை விசாரித்த மயிலாடுதுறை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி இவ்வழக்கின் எதிரியான குமாரை குற்றவாளி என தீர்மானித்து, மேற்படி குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து குற்றவாளி குமாரை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜராகி வாதாடினார். வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், பாலையூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த தலைமை காவலர் கோகிலா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினர்.






















