ஒருவார காலமாக அகற்றப்படாத குப்பைகளால் அல்லல்பட்ட பொதுமக்கள் - களத்தில் குதித்த பாஜக நிர்வாகி
மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் ஒரு வார காலமாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் இணைந்து குப்பைகளை அகற்றியுள்ளனர்.
மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் ஒரு வார காலமாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் இணைந்து குப்பைகளை அகற்றி தூய்மை பணியாற்றினார்களிடம் வழங்கியுள்ளனர்.
மயிலாடுதுறை தேங்கும் குப்பைகள்
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மகாபாரதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு பணிகளை முறுக்கி விட்டார். குறிப்பாக மயிலாடுதுறை நகர் முழுவதும் குப்பைகள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் என எண்ணி நகராட்சிக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அது ஆரம்ப கட்டத்தில் சரியாக செயல்பட்ட நிலையில் போகப் போக செயல்பாடுகளில் நரக ஆட்சி நிர்வாகம் சுணக்கம் கண்டது. அதன் விளைவாக நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்குவதும் பாதாள சாக்கடை தண்ணீர் ஓடுவதும் மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது.
மயிலாடுதுறையின் தி.நகர்
இந்நிலையில் மயிலாடுதுறையில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக வண்டிக்காரத் தெரு உள்ளது. சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவை போன்று சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான சிறு கடைகள் மற்றும் தரைக்கடைகள் நிறைந்து, நாள் முழுதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் பகுதி அதுவாகும்.
ஒருவார காலமாக தேங்கி கிடந்த குப்பைகள்
சுமார் 400 மீட்டர் தொலைவு உள்ள இந்த சாலையில் கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய குப்பைகள் சாலை முழுவதும் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் பலமுறை நகராட்சி ஆணையர் உள்ளிட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தெருவில் இறங்கி குப்பைகளை அள்ளிய பாஜக நிர்வாகி
அதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட துணைத்தலைவர் மோடி கண்ணன், பழக்கடை சங்கத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் ஒன்றிணைந்து சாலையில் குவிந்து கிடந்த குப்பைகளை பெருக்கி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து சேகரமான குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி, அவர்களது வாகனங்களில் ஏற்றி அதனை நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
கைமாறிய தூய்மை பணியாளர்கள் பணி
நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் பணியில் இருந்தவரை சுகாதாரமாக விளங்கிய இந்த தெரு, ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் பணிகள் வழங்கப்பட்ட பின்னர் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும், கடந்த ஒரு வாரமாக முழுமையாகவே தூய்மைப் பணிகள் நடைபெறவில்லை என குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி வியாபாரிகள், இதற்கு பிறகாவது நகராட்சி நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி தினசரி இங்கு தேங்கும் குப்பைகளை அள்ளி அப்புறபடுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.