மின்னல் தாக்கி பெண் விவசாய கூலித்தொழிலாளி உயிரிழப்பு - சீர்காழி அருகே சோகம்
சீர்காழி அருகே நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் கூலி தொழிலாளி மீது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சீர்காழி அருகே வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் விவசாய கூலி தொழிலாளி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தீவிர புயலான டானா
வங்க கடலில் உருவான டானா புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் இது, வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 -ம் தேதி இரவு தொடங்கி 25 -ம் தேதி காலை கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த டானா புயலால் தமிழ்நாட்டிற்கு நேரிடையாக பாதிப்பு இல்லை என்றாலும், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிக்கை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியுட்டுள்ள அறிவிப்பில், நேற்று முன் தினம் (22-10-2024) மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இது மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலையில் புயலாக டானா மாறியது. அத்துடன் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் வட மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
கரையை கடக்கும் புயல்
இது, வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 -ம் தேதியான இன்று இரவு தொடங்கி 25 -ம் தேதி காலை வரை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நர்மபுரி, திருப்பத்தூர் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் 29 -ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதல் அவ்வபோது மழையானது பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகர எலத்தூர் புது தெருவை சேர்ந்த ராஜ்மோகன் என்பவருக்கு சொந்தமான வயலில் நடவு பணி நடைபெற்றுள்ளது. அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
சீர்காழி அருகே சோகம்
இந்தமழையின் போது வயலில் நடவு பணியில் ஈடுப்பட்டிருந்த குறிச்சி ரோட்டு தெருவை சேர்ந்த மோகன் என்பவரது மனைவி 55 வயதான சாந்தி மீது மின்னல் தாக்கியுள்ளது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் காவிய பிரியா, கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த சாந்தியும் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். வயலில் வேலை பார்த்த கூலி தொழிலாளி பெண் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.