ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் விவசாயிகள்; கருணை காட்டுமா அரசு...? மயிலாடுதுறை அருகே சோகம்...!
தரங்கம்பாடி அருகே கிள்ளியூர் மாத்தூர் இடையில் செல்லும் மஞ்சள் வாய்க்காலில் பாலம் இல்லாததால் ஆபத்தான நிலையில் வாய்க்காலை கடந்து செல்லவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தரங்கம்பாடி அருகே கிள்ளியூர் மாத்தூர் இடையில் செல்லும் மஞ்சள் வாய்க்காலில் பாலம் இல்லாததால் ஆபத்தான நிலையில் உயிரை பணயம் வைத்து வாய்க்காலை கடந்து செல்லவதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பல நூறு ஏக்கரில் விவசாயம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, கிள்ளியூர் ஊராட்சி மற்றும் மாத்தூர் ஊராட்சி இடையே மஞ்சள் வாய்க்கால் செல்கிறது. கிள்ளியூர் ஊராட்சியில் வசிக்கும் ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் மாத்தூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 300 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் அந்தப்பகுதி உள்ளது. இந்நிலையில் சாகுபடிக்காக தங்கள் நிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மஞ்சள் வாய்க்கால் கடந்து சென்றால் சில மீட்டர் தூரத்திலேயே சென்று விடலாம். ஆனால், மஞ்சள் வாய்க்கால் பாலம் இல்லாததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மூங்கில் பாலமும் மிகவும் சிதலமடைந்ததால் சுமார் 5 கிலோமீட்டர் அளவு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கழுத்தளவு தண்ணீர் விவசாயிகள்
இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்வதற்கு ஆபத்தான நிலையில் கழுத்தளவு தண்ணீரில் கடந்து செல்கின்றனர். இருப்பினும் தங்கள் நிலங்களுக்கு விவசாய பொருட்கள் விவசாய இயந்திரங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றால் 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மேலும் செலவை அதிகரிக்கின்றது. அதுமட்டுமின்றி மஞ்சள் வாய்க்காலில் பாலம் அமைக்கப்பட்டால், மாத்தூர், ஆக்கூர், செம்பனார்கோவில் என பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் மாணவர்கள் செல்ல வசதியாக இருக்கும் குறைந்த நேரத்தில் சென்று விடலாம்.
பல ஆண்டு கோரிக்கை
மேலும் கிள்ளியூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. பாலம் அமைக்கப்பட்டால் இந்த வழியாக மருத்துவமனைக்கு அவசர தேவைக்கு விரைவாக சென்றுவிடலாம். இந்த சூழலில் கடந்த பல ஆண்டுகளாக பாலம் அமைக்க இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை பாலம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் யாரும் செவிமடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாழடைந்த மூங்கில் பாலம்
விவசாயிகள், பொதுமக்கள் சேர்ந்து ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்திருந்த நிலையில் அதுவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தற்பொழுது விவசாயிகள் பொதுமக்கள் வாய்க்காலில் தண்ணீர் உள்ள நிலையில் தங்கள் அவசர தேவைக்காக விவசாய தேவைக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.