செல்போனில் லிங்கை தொட்டதால் பறிபோன ஒரு லட்சம் ரூபாய் - நடந்தது என்ன?
மயிலாடுதுறை அருகே தனது செல்போனுக்கு வந்த லிங்கை தொட்டதன் மூலம் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் ரிவார்டு பாய்ண்ட்டை பணமாக பெற்றுக்கொள்ளலாம் என வந்த மெசேஜ் மூலம் இழந்த ஒரு லட்சம் ரூபாயை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.
தொடரும் இணையதள நூதன மோசடி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா குத்தாலத்தை அடுத்த அஞ்சாருவார்த்தலை கிராமத்தை சேர்ந்தவர் 49 வயதான மணிமாறன். இவரின் செல்போன் எண்ணிற்கு கடந்த 11-ம் தேதி அன்று, உங்களது கிரெடிட் கார்டு (Credit card)- க்கு வந்துள்ள Reward Point-ஐ பணமாக மாற்ற, கீழ்க்கண்ட Link-ஐ தொடவும் என்ற மெசேஜ் (SMS) வந்துள்ளது. அதை நம்பிய அவரும் Link-ஐ கிளிக் செய்துள்ளார். அவ்வாறு செய்த உடன், அது சம்மந்தமாக அவரது யூசர் ஐடி (User ID) மற்றும் பாஸ்வேர்டு (Password) ஆகியவற்றை கேட்டுள்ளது. அவரும் தனது Reward Point-ஐ பணமாக பெறும் ஆசையில், தன்னுடைய Credit Card தொடர்பான அனைத்து விவரங்களையும் அது சம்பந்தமாக வந்த OTP எண்ணையும், அதில் கேட்டபடி பதிவிட்டுள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிய மோசடி கும்பல்
அதன் பிறகு, அவருக்கு Reward Point -க்கான பண வரவு அவரது வங்கி கணக்கில் வைக்கப்படுவதற்கு பதிலாக, அவரின் Credit card-ஐ பயன்படுத்தி, ஆன்லைன் மோசடி நபர்கள், 1,02,800 ரூபாய்க்கு பொருள் வாங்கியதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதனை கண்டு அதிர்ந்து போன அவர், உடனடியாக தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டு சுதாரித்து கொண்டு இது போன்ற சைபர் குற்றம் நடந்தால் உடனடியாக புகார் அளிக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுறுத்தப்பட்டிருந்ததால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தன் ஏமாற்றப்பட்ட மோசடி குறித்து புகார் அளித்துள்ளார்.
துரிதமாக செயல்பட்ட மயிலாடுதுறை காவல்துறை
உடனடியாக புகாரை பெற்று மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோரின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சைபர் கிரைம் பிரிவு மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையிலான, காவல் ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனடியாக சம்மந்தப்பட்ட Bank மேலாளர் மற்றும் Retail Shop நோடல் அதிகாரி ஆகியோருக்கு இ- மெயில் முலம் துரிதமாக தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்தனர்.
மீட்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய்
காவல்துறையினரின் தூரித நடவடிக்கையால் பண மோசடி செய்து வாங்கப்பட்ட பொருட்கள், மோசடி செய்த நபர்களுக்கு சென்றடையாமல் தடுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மணிமாறனுக்கு, அவர் இழந்த பணம் இரண்டு தினங்களுக்குள் திரும்பவும் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்க ஆவண செய்யப்பட்டது. இழந்த பணத்தை பெற்றுக் கொண்ட மணிமாறன், தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, மயிலாடுதுறை சைபர் கிரைம் பிரிவு மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முனைவர் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு சென்றார்.