அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை மீது அடுத்தடுத்து புகார்கள் குவியும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் அலட்சியமாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு எலும்பு முறிவு சிகிச்சைக்கு வந்த நோயாளியைத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது எலும்பு முறிவு ஏற்பட்ட பெண்ணை ‘நார்மல்’ எனக் கூறி டிஸ்சார்ஜ் செய்ததும், படுகாயமடைந்த இளைஞருக்குச் முழுமையான சிகிச்சை அளிக்காமல் அனுப்பியதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எலும்பு முறிவை மறைத்து டிஸ்சார்ஜ்: உறவினர்கள் அதிர்ச்சி புகார்
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள அசனக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி தனலெட்சுமி (30). இவர் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இடப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் உறவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த தனலெட்சுமி, செப்டம்பர் 1-ஆம் தேதி அதிகாலையில் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தபோதிலும், அவருக்குக் கடுமையான வலி தொடர்ந்து இருந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் தெரிவித்தபோது, அடிபட்டால் வலி அப்படித்தான் இருக்கும் எனக் அலட்சியமாகப் பதிலளித்து, செப்டம்பர் 2-ஆம் தேதி அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகும் வலி தாங்க முடியாத தனலெட்சுமியை, அவரது குடும்பத்தினர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. அந்தச் சோதனைகளின் முடிவில், தனலெட்சுமியின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற பொருளாதார வசதி இல்லாத காரணத்தால், அவரை மீண்டும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கே அழைத்து வந்தனர்.
கட்டாயக் கையெழுத்தும் புகார் மனுவும்
மீண்டும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்ட தனலெட்சுமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், “நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே நோயாளியை அழைத்துச் செல்கிறோம்” என்று எழுதித் தருமாறு மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயப்படுத்திச் சான்றிதழில் கையெழுத்து கேட்டதாகக் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்தப் படிவத்தில் கையெழுத்துப் போட மறுத்த தனலெட்சுமியின் குடும்பத்தினர், தற்போது அங்கேயே தொடர்ந்து சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவரிடம் தனலெட்சுமி தரப்பில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் செயல்படும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் உடனடியாகக் கடுமையாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலையில் 10 தையல்கள்: ஸ்கேன் அறிக்கையைப் பார்க்காமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இளைஞர்
இதேபோல், குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை பகுதியில் ஏற்பட்ட மோதலில் கலைவாணன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தலையில் 8 தையல்களும், காதுக்கு மேல் பகுதியில் 2 தையல்களும் என மொத்தம் 10 தையல்கள் போடப்பட்டன. காயத்தின் காரணமாக அவரது தலை மற்றும் கன்னப் பகுதிக்கு எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது.
ஆனால், அந்த ஸ்கேன் அறிக்கையை அங்குள்ள மருத்துவர்கள் சரிபார்க்கவோ, அதன் முடிவுகள் குறித்து நோயாளிக்கு விளக்கம் அளிக்கவோ இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், அவருக்குத் தேவையான வலி நிவாரண மாத்திரைகளோ, முறையான சிகிச்சைகளோ வழங்கப்படாமல் மருத்துவமனை நிர்வாகம் அவசர அவசரமாக அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
“உயிர் போய்விட்டால் யார் பொறுப்பு?” - படுகாயமடைந்த இளைஞரின் கேள்வி
உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட இளைஞர் கலைவாணன் கோரிக்கை வைத்துள்ளார். சிகிச்சை முழுமை பெறாமல், ஆபத்தான நிலையில் தங்களை வெளியேற்றுவது எந்த வகையில் நியாயம் என்றும், ஒருவேளை இதனால் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் போய்விட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து வெளிவரும் இதுபோன்ற புகார்கள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். ஏழை எளிய மக்களின் ஒரே வாழ்வாதாரமாக இருக்கும் அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உயிரோடு விளையாடும் இத்தகைய சம்பவங்கள் தொடர்வது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















