“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரிய புத்தகக்கொள்முதல் ஊழல் நடந்திருப்பதாகவும், அறிவுலகத்தை ஊழல் உலகமாகவே கடந்த ஆட்சியாளர்கள் மாற்றி வைத்துள்ளதாவும் முதல்வர் விமர்சனம்

கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை எவ்வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது எனவும், அது மாணவர்களின் எதிர்க்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என முதல்வர் விஜய் சாடியுள்ளார்.
"ஊழல் என்பது ஒரு நாள்பட்ட நோய்"
தவெக சார்பில் பத்தாம் பகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் பங்கேற்றுப்பேசிய முதலமைச்சர் விஜய், ஊழல் என்ற ஒன்றுக்கு மக்கள் பழகிவிட்டார்கள் என நாம் அதை கடந்து போக கூடாது எனவும், நாள்பட்ட நோய் போல உள்ள ஊழலை குறைக்க முயற்சிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.
பிற துறைகளில் ஊழல் நடைபெற்றால் அதற்கு தீர்வு காணலாம், தவறிழைத்தவர்களை தண்டிக்கலாம் ஆனால் கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை சகித்துக்கொள்ள முடியாது எனவும், இத்துறையில் நடைபெறும் தவறுகள் மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
"ஐயய்யோ கலாய்ப்பாரே"
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு விவகாரங்களில் முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசாங்கங்கள் கவனம் செலுத்தாமல் அலட்சியப்போக்கில் இருந்ததாக கும்பகோணம் தீவிபத்து உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி சாடினார். மேலும் தமது மேஜையில் ஊழல் தொடர்பாக 3 கோப்புகள் இருப்பதாக தாம் கூறியபோது, எதிர்க்கட்சியினர் தரப்பில் இருந்து கோப்புக்களை திறந்துதான் பாருங்களேன் என தெரிவித்ததாக, 'ஐயய்யோ வந்துட்டாரே கலாய்ப்பாரே' என்ற நகைச்சுவையை சுட்டிக்காட்டி என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதியை மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும், மாணவர்கள் கற்றலுக்கு பேருதவியாக உள்ள நூலக புத்தகக்கொள்முதலிலும் ஊழல் நடந்திருப்பதாகவும் இதை துளியளவும் ஏற்றுக்கொள்ள இயலாது எனவும், கோவை பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரிய புத்தகக்கொள்முதல் ஊழல் நடந்திருப்பதாகவும், அறிவுலகத்தை ஊழல் உலகமாகவே கடந்த ஆட்சியாளர்கள் மாற்றி வைத்துள்ளதாவும் முதல்வர் விஜய் சாடினார்.
ட்ரெண்டிங் செய்திகள்























