திமுக அமைச்சரை கையோடு அழைத்து சென்று கோரிக்கை வைத்த மீனவர்கள் - எங்கு தெரியுமா?
பூம்புகார் மீன்பிடித் துறைமுக பகுதியினை தூர்வாரி ஆழப்படுத்தி தருமாறு அப்பகுதி மீனவர்கள் அமைச்சர் மெய்யநாதனை நேரடியாக மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள தூண்டில் வளைவு பகுதியை தூர்வாரி ஆழப்படுத்தி தருமாறு அப்பகுதி மீனவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனை நேரடியாக மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலோர மாவட்டம்
தமிழகத்தின் கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கே விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பீடி தொழிலே பிரதானமாக இருந்து வருகிறது. தொழிற்சாலைகள் போன்ற வேலைவாய்ப்பு மிகவும் குறைந்த மாவட்டமான இங்கு விவசாய கூலி தொழிலாளர்களும் மீன்பிடி தொழில் மூலமே தங்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றன. இருந்த போதிலும் புயல், மழை, வெள்ள காலங்களில் விவசாயமும் மீன்பிடி தொழிலும் பாதிப்படைவதால், ஆண்டு முழுவதும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாகும். அவ்வாறான சூழலில் தங்கள் தொழில் செய்யும் காலங்களில் ஏற்படும் இடையூறுகளை அரசு நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மீனவர்கள்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் தனியார் மீன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியினை முடித்துக் கொண்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது பூம்புகார் மீனவர்கள் அமைச்சரிடம் தங்கள் வாழ்வாதாரம் காக்கும் மீன்பிடி துறைமுகத்தின் பகுதியினை வந்து பார்வையிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

மீனவர்கள் வைத்த கோரிக்கை
அதனை ஏற்ற அமைச்சர் மெய்யநாதன் உடனே அங்கிருந்து புறப்பட்டு பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அருகே உள்ள தூண்டில் வளைவு வழியாக தங்களது விசைப்படகுகள் கடலுக்குள் செல்லமுடியாத அளவிற்கு தூர்ந்து போய் உள்ளது. இதனால் தங்களால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்பியிடம் வேண்டுகோள் விடுத்த அமைச்சர்
இதனால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிர்ப்பதால் உடனடியாக தூண்டில் வளைவு பகுதியில் உள்ள முக துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி தரவேண்டும் என அமைச்சரிடம் அப்பவே மீனவர்கள் மட்டும் ஊர் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். அதனைக் கேட்ட அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக மீன் வளத்துறை அமைச்சரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் இந்த கோரிக்கையை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சுதா நினைத்தால் அவரது நிதியில் இதனை உடனடியாக செயல்படுத்தி தர முடியும் என அமைச்சர் மெய்யநாதன் எம்பி சுதாவிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.























