Mayiladuthurai: மூன்றரை வயது சிறுமி பாலியல் வழக்கு - மயிலாடுதுறை ஆட்சியரை தொடர்ந்து எஸ்பிக்கு சிக்கல்..?
மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, இளஞ்சிறார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கில் சிறுமியின் சகோதரர் உறவுமுறை கொண்ட சிறுவனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் மாற்றம்
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகாபாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார்.

புதிய ஆட்சியரிடம் மனு
இந்த சூழலில், உண்மையான குற்றவாளியை மறைத்து பொய்யான தகவல் கொடுத்த அங்கன்வாடி ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சரிவர விசாரணை செய்யாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம தலைவர், முக்கியஸ்தர்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், குற்றச்சாட்டப்பட்ட சிறாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 50-க்கு மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
மனுவின் சாராம்சம்
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகார் மனுவில், சம்பவத்தன்று சிறுமியை வழக்கம்போல அழைத்துச் செல்லும் அங்கன்வாடி ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு, அங்கன்வாடி ஆசிரியர் வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் சென்று, உனது தங்கையை காணவில்லை. தேடிப் பார்க்க வேண்டும் என அழைத்துச் சென்று உள்ளார். அவரை அழைத்து சென்ற பிறகு அவரைத் தேட சொல்லி அங்கன்வாடி சுவர் அருகில் சத்தம் கேட்பதாக கூறி சிறுவனை பார்க்கச் சொல்லியுள்ளார்.

தவறான முதல் தகவல் அறிக்கை
சிறுவன் சுவரின் மீது ஏறி பின்புறம் குதித்து பார்த்துவிட்டு எனது தங்கையை அடித்து காயப்படுத்தி உள்ளார்கள் என்று சொன்னவுடன், இரண்டு பேர் அந்த சிறுவனை பிடித்து கை மற்றும் கால்களை கட்டி நீதான் அடித்தாய் எனக் கூறி மரத்தில் கட்டி வைத்தார்கள் என்பது தெரிய வருகிறது. அந்த அங்கன்வாடி கட்டடம் அருகில் சட்டவிரோத நபர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த பிரச்னை குறித்து எங்கள் கிராம மக்களிடம் விசாரணை செய்யாமலும், எங்கள் மக்கள் கூறுவதையும் கேட்காமல் தன்னிச்சையாக காவல் துறையினர் உரிய விசாரணை செய்யாமல் அங்கன்வாடி ஆசிரியர் கொடுத்த பொய்யான தகவலின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பாக புகார் வாக்குமூலம் எழுதியுள்ளனர். சம்பந்தப்பட்ட எனக்கோ, என் மனைவிக்கோ எவ்வித விவரமும் சொல்லாமல் முதல் தகவல் அறிக்கையை அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி ஊழியரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் உள்ள விபரம் எனக்கு எதுவும் தெரியாது. எனது மகளுக்கு ஏற்பட்ட காயமானது யாரால் ஏற்பட்டது என்பதும் எனக்குத் தெரியாது. எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி இந்த மனுவை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முறைப்படி அனுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு சிறப்பு புலன் அதிகாரியை நியமித்து விசாரணை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதனால் தவறான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தப்பிவிட்டு, நிரபராதி தண்டிக்கப்பட்டரா..? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், இவ்விவகாரம் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் விளக்கம்
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சிறுவனை சீர்காழி நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி சிறுவன் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தன் அடிப்படையிலேயே சிறுவன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.






















