மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 769 பேர் கைது, 5 பேர் மீது குண்டாஸ் - எதற்காக தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 769 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 769 பேர் கைது செய்யப்பட்டு 10 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடரும் சட்டவிரோத மது விற்பனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது பானங்கள் விற்பனையை கண்டுகொள்வதும் இல்லை என கூறப்படுகிறது.

எஸ்பி நடவடிக்கை
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுபடி, சட்டவிரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் சிறப்பு மது வேட்டையானது மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் தாலுக்கா காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று 18.04.2025 காலை 11.00 மணியளவில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல்பாலச்சந்திரன், சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ஜெயா மற்றும் காவல் ஆளிநர்கள் சீர்காழி பகுதியில் சிறப்பு மது வேட்டை மேற்கொண்டனர்.

இரகசிய தகவல்
அப்போது காவல்துறையினருக்கு மது விற்பனை தொடர்பாக இரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருமுல்லைவாசல், அம்பேத்கர் தெரு, கொல்லை குப்பைமேடு அருகில் பகுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகரை சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் 24 வயதான ராஜ்குமார் என்பரை கைது செய்து மேற்படி நபர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 73 லிட்டர் மதுபானத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேற்படி நபர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும், இவ்வழக்கின் எதிரி ராஜ்குமார் என்பவருடன் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள வழக்கின் மற்ற குற்றவாளியை சீர்காழி காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடப்பாண்டில் 738 வழக்குகள் பதிவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 738 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட 769 நபர்கள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து சுமார் 5792 லிட்டர் மதுபான வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கின் எதிரிகள் மது விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்க எண்
நடப்பாண்டில் இதுவரை தொடர்ந்து சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 05 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் சம்பந்தமாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10561 அல்லது அலைபேசி எண் 96261-69492 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















