மகனின் கடனுக்காக தந்தையின் கைவிரல்களை துண்டித்த கொடூர கும்பல் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்!
மயிலாடுதுறையில் மகன் பெற்ற கடனுக்காக கந்துவட்டி கும்பல் தந்தையின் கைவிரல்களை துண்டித்த கொடூர செயலில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகன் வாங்கிய கடனை திரும்ப பெறுவதற்காக அவரது தந்தையை காரில் கடத்திச் சென்று கைவிரல்களை வெட்டிய கும்பலை கடலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
15 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய மகன்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவர், தற்போது, மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது மகன் மணிகண்டன் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். இவர், தனது சொந்த தேவைக்காக சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிசாமியி என்பவரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் 10 லட்சம் ரூபாயினை திரும்பகொடுத்து கடனை குறைந்துள்ளார்.
கடத்தப்பட்ட தந்தை
இந்த சூழலில், மீதம் உள்ள 5 லட்சம் ரூபாயினை தருவதற்குள் பழனிச்சாமி விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் மீதம் உள்ள பணத்தினை பழனிச்சாமி திரும்ப கேட்டுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பி தர பழனிச்சாமியிடம் கால அவகாசம் கேட்டுள்ளார். முதலில் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை கடன் கொடுத்தவர்கள் அந்தப் பணத்துக்கு கூடுதலாக பணம் தரும்படி கூறி வந்துள்ளனர். ஆனால், நடராஜின் மகன் மணிகண்டன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தந்தையை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், பணம் கொடுத்த பழனிசாமியின் ஆதரவாளர்கள் 5 பேர் கொண்ட கும்பல் நடராஜனின் மகனை கடத்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், அங்கு அவர் இல்லை என்பதால் காலையில் டீ கடைக்கு சென்ற நடராஜை காரில் வந்த அந்தக் கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்நிலையத்தில் புகார்
இதுதொடர்பாக அவரது மகள் தனது தந்தை காரில் கடத்தப்பட்டதாக மயிலாடுதுறை காவல் நிலையத்திலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உடனே, மயிலாடுதுறை போலீசார் இது குறித்து கடலூர் மாவட்டபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
முதியவரின் விரல்கள் துண்டிப்பு
அதன்பேரில், கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியான காரைக்காடு பகுதியில் முதுநகர் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் 5 பேரும், முதியவர் நடராஜனும் இருந்துள்ளனர். அப்போது, நடராஜன் அழுது துடித்துக் கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் அவரை மீட்டு பார்த்தபோது, அவரது கை விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரது முகம், கண்கள் வீங்கி இருந்தன. இதை அடுத்து, அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஐந்து பேரிடம் தீவிர விசாரணை
தொடர்ந்து, அந்த ஐந்து பேரை போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராஜன் மகன் வாங்கிய கடனுக்காக நடராஜனை கடத்தி அவர் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு கூறியுள்ளனர். இதற்கு நடராஜன் உடன்படாததால் பத்திரத்தில் கையொப்பம் இடுவதற்காக அவரது கைவிரலை வெட்டி எடுத்ததாக அந்தக் கும்பல் கூறியதாக தெரிய வந்துள்ளது. மேலும், அந்த 5 பேர் கொண்ட கும்பல் அதிக அளவிலான மது போதையில் இருந்த காரணத்தால், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது. மகன் வாங்கிய கடனுக்காக கந்து வட்டிக்காக கூடுதல் பணத்தை திரும்ப கேட்டு முதியவரை கடத்தி கை விரலை துண்டித்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















