புத்தகப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! மயிலாடுதுறையில் அறிவுத் திருவிழா - சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் முழு விவரம்..
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலக இயக்ககம் நடத்தும் 4-ஆவது புத்தகத் திருவிழா பிப். 27 முதல் மார்ச் 8 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான "4-ஆவது புத்தகத் திருவிழா" வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளது. அறிவுப் பசியைத் தீர்க்கும் இந்த விழா மார்ச் 8-ஆம் தேதி வரை 10 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அமைச்சர் தொடங்கி வைக்கும் அறிவுச் சங்கமம்
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொதுநூலக இயக்ககம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த 4-ஆவது புத்தகத் திருவிழாவை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தத் திருவிழாவானது நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும். இதில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்கள் தங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் உள்ளன.
பத்து நாட்களும் அதிரும் சொற்பொழிவுகள்
புத்தகத் திருவிழாவையொட்டி நாள்தோறும் மாலை நேரங்களில் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.
* பிப். 28: சுகன்யா முத்துசாமி - "காலத்தால் அழியாத நண்பர்கள்", முனைவர் மு. சிவச்சந்திரன் - "நவில் தொறும் நூல் நயம்".
* மார்ச் 01: ந. தினேஷ்குமார் - "டிஜிட்டல் காலத்தில் வாசிப்புச் சூழல்", கவிஞர் இரெ. கங்கைமணிமாறன் - "வரம் தரக் காத்திருக்கும் புத்தகங்கள்".
* மார்ச் 02: வீ. இராஜராஜன் - "கதை கதையாம்", முனைவர் சி. சிவசங்கரன் - "அறிவை விரிவு செய்".
* மார்ச் 03: வி. இராமன் - "வெற்றி என்பது சம்பவமல்ல, பழக்கம்", முனைவர் பல்லவி குமார் - "இதயங்களின் இதயம்".
* மார்ச் 04: தி. முத்துக்கணியன் - "தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு", ஆறு. துரைக்கண்ணன் - "வானமே எல்லை".
* மார்ச் 05: சி. இராஜ்குமார் - "உன்னில் உன்னைச் செதுக்கு", முனைவர் ப. அசோக்குமார் - "வாசிப்பு ஒரு வரம்".
* மார்ச் 06: முனைவர் வாசு. சசிகுமார் - "வாழ்ந்திடச் சொல்கிறேன்", முனைவர் துரை. குணசேகரன் - "வாழ்வே உன்னோடு தான்".
* மார்ச் 07: இரா. மலர்விழி - "இளைய தலைமுறையினர் வாசிப்பில் சங்க இலக்கியம்", முனைவர் அ. குணசேகரன் - "வழி நெடுக".
*மார்ச் 08: முனைவர் இர. பத்மலெட்சுமி - "வாசிப்போம் வையம் ஆள்வோம்", முனைவர் ந. உமா - "வாசிப்புச் சிறகால் வானம் தொடுவோம்".
கலை நிகழ்ச்சிகளும் பண்பாட்டுக் கொண்டாட்டமும்
புத்தகங்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாகப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* மாலை 4.00 - 6.00 மணி: பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
* மாலை 6.00 - 7.00 மணி: தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கிராமியத் தன்மை மாறாத நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்படும்.
மாவட்ட ஆட்சியரின் அழைப்பு
"புத்தகங்கள் ஒரு மனிதனைச் செதுக்கும் உன்னதக் கருவி. மயிலாடுதுறை மாவட்ட மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் இத்திருவிழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், அறிவார்ந்த சமுதாயத்தைப் படைக்கவும் இந்தத் திருவிழா ஒரு பாலமாக இருக்கும். எனவே, அனைவரும் திரளாக வந்து தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திருவிழாவிற்காக தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























