கும்பலாக நின்ற கல்லூரி மாணவர்கள் - அழைத்து அட்வைஸ் செய்த டிஎஸ்பி...!
மயிலாடுதுறையில் கும்பலாக நின்ற கல்லூரி மாணவர்களை அழைத்து போதைப்பொருளின் தீமைகள் குறித்து டிஎஸ்பி சுந்தரேசன் அட்வைஸ் செய்த நிகழ்வு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

கும்பலாக நின்ற கல்லூரி மாணவர்களை அழைத்து போதைப்பொருளின் தீமைகள் குறித்து மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் அட்வைஸ் செய்த நிகழ்வு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
டிஎஸ்பி சுந்தரேசன்
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனை, அரசு அனுமதி இன்று செயல்பட மதுபான பார்களுக்கு சீல் என பொறுப்பேற்ற முதல் நாள்முதல் அதிரடி காட்டினார்.
மீண்டும் பணிக்கு திரும்பிய டிஎஸ்பி
இந்நிலையில் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நீண்ட மருத்துவிடுப்பில் சென்றார். அவரின் அதிரடி நடவடிக்கைகளால் அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக பரவலாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டடது. இதனால் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுப்பட்டுவந்தவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் மீண்டும் விடுப்பு முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர் மீண்டும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனைக்கு எதிராக தனது அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளார். அதன் ஒன்றாக முதல்நாளே கஞ்சா மற்றும் வெளிமாநில மது விற்பனை தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளார்.
மாணவர்கள் நலனில் அக்கறை
இந்நிலையில் மதுவிலக்கு அமலாக்கதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள கடைவீதியில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கூட்டமாக நின்றுள்ளனர். இதனை கண்ட டிஎஸ்பி சுந்தரேசன் தற்போது மதுவால் அதிக இளைஞர் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களை அருகில் அழைத்து மது மற்றும் இன்றி இன்னும் பிற போதை பொருட்களால் மனநிம்மதி, பெற்றோர்கள் மீது வெறுப்பு, கல்வி பாதிப்பு, வேலைகளில் பிரச்சினை, திருட்டு பழக்கங்கள், போதை பொருள் பழக்கம் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் எவ்வித மன அழுத்ததிற்கும் ஆளாகாமல் இருக்கலாம் என அதன் விளைவுகள் குறித்தும் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்.
தயங்காமல் அழைக்கலாம்
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பலர் வெளியூர்களில் இருந்து வந்து கல்லூரி விடுதிகள் அல்லது அறைகள் எடுத்து தங்கி பயின்று வருகின்றனர். இதுபோன்ற மாணவர்கள் அதிகம் பாதிக்க வழிவகை உள்ளது, மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் இவர்களை படிக்க வைக்கின்றனர் என்பதை எல்லாம் அவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் கல்லூரிகளில் புரோக்கர்கள் போன்று யாரேனும் போதை பொருள்கள் விற்பனை செய்தால் அதனை தன்னிடம் கூறுங்கள் என தன்னுடைய 9498158885 செல்போன் எண்னையும் வழங்கியுள்ளார். சக நண்பர்கள் யாரேனும் போதை பழக்கத்திற்கு பழக்கப்பட்டிருந்தாலும் தயங்காமல் என்னிடம் கூறினால் அவர்களின் மறுவாழ்விற்கு அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன் என உறுதியளித்தார். குறிப்பாக மாணவர்களின் தாய் தந்தையர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்காக அவர்கள் வாழ்க்கையை தியாகம் செய்கின்றனர். நீங்கள் நல்ல நிலைக்கு உயர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இதனால் நடைபெற எந்த ஒரு போதை பழக்கங்களுக்கும் மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க வேண்டும்
யார் அந்த டிஎஸ்பி சுந்தரேசன்..?
காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்துாரி, 63, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் 65 வயதான வளையாபதி, அ.தி.மு.க., பிரமுகர் 52 வயதான பிரபு, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவல்துறையினர், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில், பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் நலன் தேறினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
அதேபோல, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது. அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரேசன் விசாரித்து, மாநில மனித உரிமைகள் கமிஷனுக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டிய டிஎஸ்பி
அத்துடன், காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, அவர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 10 -ம் தேதி, மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கை எல்லாம், அரசுக்கு பாதகமாக இருப்பதால், இடம் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இன்றளவும் அது தொடர்பான அவருக்கு தொடர்ந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

