கட்டிட பணிகள் முழுமை பெறாத சுகாதார நிலையம் -அவசரக் கதியில் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - அதிர்ச்சியில் உறைந்து போன பொதுமக்கள்
மயிலாடுதுறையில் தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு அவசரகரியில் கட்டிமுடிக்காத நகர்ப்புற சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவமனைகள் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.
5544 சதுரடியில் சுகாதார நிலையம்
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ராஜன் தோட்டம் அருகே 1கோடியை 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5544 சதுர பரப்பளவில் தரைத்தளம், முதல் தளத்துடன் கூடிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறை, பிரசவ அறை, மருந்தகம், ஆய்வுக்கூடம், புறநோயாளிகள் பிரிவு, எக்ஸ்-ரே, ஸ்கேன் அறை உள்ளிட்டவைகள் அமையப் பெற்றுள்ளது. இந்த அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அவசர கதியில் திறந்து வைத்த முதல்வர்
சுகாதார நிலைய கட்டிடத்தில் பல இடங்களில் ஜன்னல்கள், தரை, செல்ஃப், கழிவறைகள் மின்சார வசதி, படிக்கட்டுகள் போன்ற அடிப்படை கட்டுமான பணிகள் முழுமை அடையாத நிலையில், டைல்ஸ் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் முழுவதும் சுகாதார நிலையத்தில் உள்ளே பரப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக அதற்கான திறப்பு விழா ஏற்பாட்டினை செய்து, அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் திறந்து வைக்க வழிவகை செய்துள்ளனர்.

பொதுமக்கள் அதிருப்தி
ஜன்னல் பகுதிகளில் பழைய பேனர்களை வைத்து அடைத்தும், முழுமை பெறாத படிகட்டுகளில் தரை விரிப்புகளை போட்டு மறைத்தும் உள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் தாங்கள் இந்த முழுமை பெறாத கட்டிடத்தில் உள்நுழைந்து தங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமாக உள்ளது. இவ்வளவு அவசரமாக பணிகளை நிறைவு செய்யாமல் இந்த சுகாதார நிலையத்து திறப்பதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியவாறு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி சென்றனர்.

மதிக்கப்படாத புரோட்டாக்கால்
குறிப்பாக இதுபோன்ற கட்டிடங்களை பொதுப்பணி துறையினர் கட்டி முடித்து பின்னர் துறை சார்ந்து ஒப்படைப்பது நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பொதுப்பணி துறையினர் கட்டி முடித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒப்படைப்பு செய்யப்பட்ட இந்த சுகாதார நிலையம் முழுமையாக பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்னர் முதலமைச்சரிடம் அதற்கான திறப்பு விழாவிற்காக நாள் கேட்கப்பட்டு திறப்பு விழா நடைபெறுவது மரபு. ஆனால் அதிகாரிகளும், கட்சியினரும் கட்டிடம் முழுமை பெறாததை மறைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏமாற்றினார்களா? அல்லது தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு இவ்வாறு அவசரகதியில் திறக்கப்பட்டதா? என்ற கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் மரு.அஜீத் பிரபுகுமார், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், நகர்மன்ற குழு உறுப்பினர் காந்திராஜன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






















