பருத்தி விவசாயிகளுக்கு நற்செய்தி - அதிக லாபம் பெற வழிகாட்டுதல் இதோ !
மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி விவசாயிகள் அதிக லாபம் பெற ஆட்சியரின் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 3.66 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 52,700 மெட்ரிக் டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு 13,304 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விவசாயிகள் தங்கள் பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய சில முக்கிய வழிகாட்டுதல்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது;
பருத்தி ஏலம் மற்றும் விலை நிலவரம்
பொதுவாக, பருத்தியின் தரத்தைப் பொறுத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடைபெறும் ஏலத்தில் வெளி மாவட்ட பருத்தி அரவை ஆலை உரிமையாளர்கள், அவர்களது முகவர்கள் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் எனப் பலரும் பங்கேற்கின்றனர். இதன் மூலம் ஆரோக்கியமான போட்டி உருவாகி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
சமீப வாரங்களில், மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM) 11,849.05 குவிண்டால் பருத்தி ரூபாய் 783.163 லட்சம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதில், பருத்தியின் தரத்திற்கேற்ப குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 7,699/-ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 5,299/-ம், சராசரி விலையாக ரூ. 6,825/-ம் கிடைத்துள்ளது. இது விவசாயிகளுக்கு ஓரளவு லாபகரமான விலையாகும்.
தர நிர்ணயத்தின் முக்கியத்துவம்
பருத்திக்கு நிர்ணயிக்கப்படும் விலை அதன் தரத்தைப் பொறுத்தே அமைகிறது. வியாபாரிகள் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம், இழை நீளம் (staple length), இழையின் நுண்மைத்தன்மை (fineness), மற்றும் முதிர்ச்சி (maturity) ஆகியவற்றைக் கருத்தில் கொள்கின்றனர். எனவே, விவசாயிகள் தங்கள் பருத்தியைத் தரம் பிரித்து விற்பனைக்குக் கொண்டு வருவது மிக அவசியம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.
அரசு கண்காணிப்புக் குழு ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் பருத்தி ஏலப் பணிகளை ஆய்வு செய்து கண்காணிக்க தமிழக அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் பல்வேறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, 828 லாட் பருத்தி வரத்து இருந்ததாகவும், இது மொத்தம் 3,184 மூட்டைகளாகப் பெறப்பட்டதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. இத்தகைய ஆய்வுகள், வெளிப்படையான ஏலத்தை உறுதி செய்வதோடு, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்கின்றன.
விவசாயிகளுக்கான முக்கிய அறிவுரைகள்
மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், விவசாயிகள் தங்கள் பருத்திக்கு அதிக லாபம் பெற சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
- நன்கு உலர வைத்தல்: பருத்தியை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு வரும் முன், அதை நன்கு உலர வைத்து ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால், அது பருத்தியின் எடையைக் குறைத்து, தரத்தையும் பாதிக்கும்.
- நிறவேறுபாடற்ற பருத்தி: ஒரே நிறமுள்ள பருத்தியை ஒன்றாகப் பிரித்து, நிறவேறுபாடுள்ள பருத்தியை தனியாகப் பிரிக்க வேண்டும். இது பருத்தியின் தரத்தை மேம்படுத்தி, நல்ல விலை கிடைக்க உதவும்.
- கொட்டு மற்றும் நிறமாற்றமுடைய பருத்தியை தனிப்படுத்துதல்: கொட்டு (damaged cotton) மற்றும் நிறமாற்றமடைந்த (discolored cotton) பருத்தியை நல்ல பருத்தியுடன் கலக்காமல் தனியாகப் பிரித்து விற்பனைக்கு வைக்க வேண்டும். இதனால் நல்ல தரமான பருத்திக்கு உரிய விலை கிடைக்கும்.
இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்கள் பருத்திக்கு நல்ல விலையைப் பெற்று, அதிக லாபம் அடைய முடியும் என மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






















