![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ABP Nadu Impact: குடிநீர் இன்றி தவித்து வந்த கிராம மக்கள் - ஏபிபி நாடு செய்தி எதிரொலியால் முதல்வர் உத்தரவின் பேரில் ஆட்சியர் எடுத்த நடவடிக்கை
காத்திருப்பு ஊராட்சி சம்பாநோடை கிராமத்தில் சேறும் சகதியுமாய் வழங்கபட்ட குடிநீர் குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
![ABP Nadu Impact: குடிநீர் இன்றி தவித்து வந்த கிராம மக்கள் - ஏபிபி நாடு செய்தி எதிரொலியால் முதல்வர் உத்தரவின் பேரில் ஆட்சியர் எடுத்த நடவடிக்கை ABP Nadu Impact Mayiladuthurai District Sirkazhi Unmaintained Water Tank District Collector Takes Action TNN ABP Nadu Impact: குடிநீர் இன்றி தவித்து வந்த கிராம மக்கள் - ஏபிபி நாடு செய்தி எதிரொலியால் முதல்வர் உத்தரவின் பேரில் ஆட்சியர் எடுத்த நடவடிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/08/771668a75fa5eae8f83fd2735683123d1723104558121733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சீர்காழி அருகே காத்திருப்பு ஊராட்சி சம்பாநோடை கிராமத்தில் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஊராட்சி சார்பில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் குறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்பு ஊராட்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது காத்திருப்பு ஊராட்சி. இந்த ஊராட்சியில் சம்பாநோடை கிராமத்தில் ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் நிலத்தடிநீர் உப்பு நீராக பல ஆண்டுகளுக்கு முன்பு மாறியுள்ளது. அதனால் அதனை பயன்படுத்த முடியாது நிலை உருவானது. அதன் காரணமாக ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை உருவாக்கி அதன் மூலமாக அப்பகுதி மக்களுக்கு குடி தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத நீர்தேக்க தொட்டி
இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டி ஆனது, எவ்வித பராமரிப்பு செய்யாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக தண்ணீர் தொட்டி சுத்தப்படுத்த படாமல் இருந்து வருகிறது. மேலும் நீர்தேக்க தொட்டிலில் இருக்கும் தண்ணீர் காவித்தன்மை கொண்டதால் அந்த காவிகள் நீர்தேக்க தொட்டியில் பல ஆண்டுகளாக தோங்கி தொட்டியில் படிந்துள்ளது. அவற்றை முறையாக சுத்தம் செய்யாத நிலையில் அதன் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடி தண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அடர்த்திமாக இருந்து வருகிறது.
சேறு போல வினியோகம் செய்யப்பட்ட குடிநீர்
சேறு போல தட தடவென அடர்த்தியாக சிவப்பாக தண்ணீர் வருவதால் அந்த தண்ணீரை தவிர்த்து தண்ணீர் தேடி பெண்கள் தலையிலும், சிறுவர்கள் சைக்கிளில் குடங்களை கட்டி கொண்டு அடுத்த கிராமங்களுக்கு தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றனர். மழை காலத்தில் மக்கள் தண்ணீர் எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் குடும்பங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடிப்பதிலே நேரம் கடந்து கால தாமதமாக படிக்க செல்ல வேண்டி உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.
தீர்வு கேட்ட கிராம மக்கள்
மேலும் இந்த கிராம மக்கள் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் நல்ல குடிநீர் வழங்க கோரி பல முறை ஊராட்சி நிர்வாகம், உள்ளிட்ட பல துறை அதிகாரிகளிடம் மனு அளித்து இதுநாள்வரை நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். தண்ணீர் பஞ்சம் அதிகளவில் நிலவுவதால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறது. இந்த சூழலில் தொடர்ந்து தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை அப்பகுதி இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, அவர்களாகவே குடிநீர் நீர்தேக்க தொட்டியில் இறங்கி காவி நிறத்தில் வந்தால் கூட பரவாயில்லை அடர்த்தியாக வருவதை போக்க தூய்மை செய்துள்ளனர்.
ஏபிபி நாடு செய்தி எதிரொலி
மேலும் இனி வரும் காலங்களில் ஆவது காலதாமத படுத்தாமல் உடனடியாக தமிழக அரசும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும், தனி கவனம் செலுத்தி கிராமத்திற்கு தினந்தோறும் நல்ல குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏபிபி நாடு செய்தி தளம் செய்தியாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் தொலைபேசி வாயிலாக நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் மேற்கண்ட சம்பாநோடை கிராமத்தில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான தண்ணீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் உடனடியாக, சம்பாநோடை கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 3 கைப்பம்புகள் அமைக்கவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 4 குடிநீர் இணைப்பும் இன்றைக்குள் அமைத்து தர உத்தரவிட்டார்கள். மேலும், மேற்கண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)