மகளிர் உரிமை திட்டம்....பெண்களே ஜாக்கிரதை - தேனி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..விவரம் இதோ!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகள் கைபேசி எண்ணிற்கு ஏதேனும் கடவுச்சொல் (OTP - One Time Password)) கேட்டால் தகவல் தெரிவிக்க வேண்டாம், மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகள் கைபேசி எண்ணிற்கு ஏதேனும் கடவுச்சொல் (OTP - One Time Password)) கேட்டால் தகவல் தெரிவிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமை தொகையாக ரூ.1000/- வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் (15.09.2023) அன்று மகளிர்களுக்கு மாதம் ரூ.1000/- பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறுவதற்காக நடைபெற்ற முதற்கட்ட, இரண்டாம்கட்ட மற்றும் சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில், விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு 18.09.2023 அன்று முதல் அனுப்பி வைக்கப்படும். தங்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை இ-சேவை மையம் வழியாக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யும் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் அளவில் விசாரணை செய்யப்பட்டு, தகுதியிருப்பின் உடனடியாக அவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
மேலும் முக்கியமாக பயனாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு வங்கியிலிருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்த நிறுவனத்திலிருந்தோ அழைக்கிறோம் என போலியான அழைப்பு வந்து ஏதேனும் கடவுச்சொல் (OTP - One Time Password) அல்லது ATM (CARD) அட்டையின் பின்பக்கத்தில் உள்ள மூன்று இலக்க எண்களையோ தெரிவிக்கக்கோரி யாரேனும் கேட்டால் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறான விவரங்களை தெரிவித்தால் உங்களுடைய வாங்கி கணக்கிலிருந்து மேற்கண்ட தொகை இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகள் விழிப்புணர்வுடன் இருந்திட தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா, கேட்டுக்கொண்டுள்ளார்.