Madurai: "அமித்ஷா யார் பிரதமராக வர வேண்டும் என்கிறாரோ அவருக்கே எனது ஆதரவு" - மதுரை ஆதீனம் பேட்டி
பழைய ஆதீனம் நல்லவர்தான் ஆனால் ஏமாற்றப்பட்டு விட்டார், அமித்ஷா யார் பிரதமராக வர வேண்டும் என்கிறாரோ அவருக்கே எனது ஆதரவு , தமிழரே முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருக்க வேண்டும் - மதுரை ஆதினம் பேட்டி
மதுரை ஆதீனம் மடத்தில் உள்ள சொத்துக்களை மீட்பு பணி நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த
293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் அவர்கள் பேசுகையில்...," மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாக இருக்க வேண்டும், பழைய ஆதீனம் நல்லவர்தான் ஆனால் ஏமாற்றப்பட்டு விட்டார். ஆக்கிரமிப்பில் உள்ள மதுரை ஆதீனம் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மடத்திற்கு வந்து 45 வருடங்கள் ஆகிவிட்டது இதற்கு முன்பாக குன்றக்குடி அடிகளாரிடம் நான் இருந்து வந்தேன். அவர்களிடமிருந்து பயிற்சி பெற்றவன். தர்மபுர ஆதீனத்திலும் நான் இருந்தேன். திருவாதிரை ஆதீனத்திலும் இருந்தவன். ஆவுடையார் கோவியில் இருந்துள்ளேன். தமிழகம் முழுவதும் சுற்றி வந்துள்ளேன். அனுபவம் நிறைய இருக்கிறது அது என்னை காப்பாற்றும்.
மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களை விரைவில் மீட்போம். மேலும் மதுரையில் உள்ள ஆதீனம் சார்பில் விவசாய பல்கலைக்கழகம் கொண்டு வர போகிறோம். பிரதமரிடம் பல்கலைக்கழக அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளேன். உபயோதாரர்களை நம்பி கல்வி நிறுவனம் தொடங்கப் போவதில்லை. மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் அது நடைபெறும். கட்சி ரீதியாக அரசியல் ரீதியாக நான் பேச விரும்பவில்லை, பிரதமர் அவர்கள் நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது அனைத்து ஆதீனங்களையும் சந்தித்தார். தமிழுக்கும் தமிழ் உணர்வு மிக்க பாரதப் பிரதமர் அவர்கள் மீண்டும் பிரதமராக வாய்ப்புகள் உள்ளது.
அரசியல் பிரச்சாரத்திற்கு பழைய ஆதீனம் போல நான் செல்ல விரும்பவில்லை. மீனாட்சி அம்மன் கோவில் குறித்து கருத்துக்கள் ஏதும் கூற விரும்பவில்லை. தமிழர்களுக்கு குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்ததால் தான் பாரத பிரதமர் அவர்களிடத்தில் செங்கோல் வழங்கினேன். தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் தமிழன் பிரதமராக ஆக வேண்டும். ஆதீனங்கள் அரசியல் பிரச்சாரம் செய்ய கூடாது என்பதால் நானும் பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன். அமித்ஷா அவர்கள் பாரதப் பிரதமராக யார் வரவேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுக்கு எனது ஆதரவு இருக்கும். எல்லா இடத்திலும் தமிழன் இருக்க வேண்டும். அப்துல் கலாம் அவர்கள் கூட தமிழன்தான். ஆதரிக்கலாம் வாழ்த்துச் சொல்லலாம் தமிழ் உணர்வு கொண்ட சீமான் கூட வந்து பார்த்தார். ஆனால் பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டேன். அரசியல்வாதிகள் வந்தால் ஆசிர்வாதம் செய்யலாம் ஆனால் பிரச்சாரத்திற்கு செல்லக்கூடாது. சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. குறிப்பாக என்னை அவர்கள் வந்து சந்தித்தது கிடையாது. குறிப்பாக சினிமா நடிகர்கள் குறித்து கருத்து கூறினால் அவரது ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள். எனக்கு நிறைய பணிகள் இருக்கிறது. ஆதீன மடம் மூலமாக புத்தகங்கள் எழுதி வருகிறேன். அந்தப் பணிகளை செய்வதற்கு எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.
பாரதப் பிரதமர் மோடி பிராமணர் கிடையாது மேடையில் திருக்குறள் தேவாரம் கேட்டு தலையசைத்தார் மந்திரங்கள் வாசிக்கும் போது கேட்கின்றார். உலகம் முழுவதும் திருக்குறளை தான் எடுத்துரைக்கிறார் பாரதப் பிரதமர் அவர்கள். மதுரை ஆதீனமாக பொறுப்பேற்று ஒரு வருடங்கள் ஆகிவிட்டாலும் உள்ளுக்குள் இருப்பது போல் தான் உள்ளது. சுற்றிலும் நெருக்கடிகள் தான் உள்ளது. நான் சிறுவயது முதலாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தான் ஈடுபட்டு வருகிறேன். காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தான் நான் ஈடுபட்டு வந்தேன். செல்லும் இடங்களில் எல்லாம் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பிறரின் பழி சொல்லை வாங்கி இது போன்ற செய்தியாளர்களை சந்திப்பதுதான் எனது வாடிக்கையாகிவிட்டது. பாரதப் பிரதமர் அவர்களை சந்திப்பது குறித்து மூன்று முறை அழைப்பு விடுத்தார்கள். இலங்கை அகதிகளுக்கு நிறைய பணிகளை செய்து கொடுத்ததனால் அவரை நேரில் சந்தித்தேன்” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்