சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்தில் வட மாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க கடும் போராட்டம்.
விருதுநகர், சிவகாசி பகுதியில் இயங்கும் பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இங்கு பட்டாசு ஆலைகள் அதிகளவில் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமாக இருக்கும் என்பதால் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீபாவளிக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது.
பட்டாசு ஆலைகள் விதி மீறல்கள் அதிகாரிகள் நடவடிக்கை
உற்பத்தி அதிகரிக்க உற்பத்தியாளர்கள் விதிமுறைகளை மீறுவதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் வருகிறது. பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை என, தனிக்குழு அமைக்கப்பட்டு இந்த குழுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் என்பது மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பல இடங்களில் அடிக்கடி பட்டாசு விபத்து நடக்கதான் செய்கிறது. இந்நிலையில் சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்தில் வட மாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க கடும் சிரமத்தைத் தாண்டி தீயை அணைத்து வருகின்றனர்.
தீபாவளி நெருங்கும் சமயத்தில் பட்டாசு வெடி விபத்து
சாத்தூர் அருகே உள்ள கீழ ஓடம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் தீபாவளிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க தயாராக இருந்த இருப்பு அறையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது, உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. வெடிவிபத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியில் சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 15 கிலோமீட்டர் வரை அதிர்வு காணப்பட்டதாகவும், தொடர்ந்து பட்டாசுகள் வெடுத்துக் கொண்டு இருப்பதன் காரணமாக தீயணைப்புத் துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் மீட்புப் பணியிள் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெடிவிபத்தில் வடமாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல்
இந்தப் பட்டாசு தொழிற்சாலையில் அசாம், பீகார் உள்ளிட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தற்பொழுது இந்த வெடிவிபத்தில் வடமாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீயை அணைத்த பின்னரே உள்ளே சென்று உயிரிழப்பு ஏதும் உள்ளதா? பாதிப்புகள் ஏதும் உள்ளதா? என தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு