வைகை அணை திறப்பு: திண்டுக்கல், மதுரை, சிவகங்கை விவசாயிகளுக்கு குஷி! 1 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி!
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் ஒரு போக பாசனத்திற்காக வைகைஅணையில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவுப்படி திண்டுக்கல், மதுரை ,சிவகங்கை மாவட்டங்களின் ஒரு போக பாசனப்பகுதி நிலங்களுக்காக வினாடிக்கு 1,130 கன அடி வீதம் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேற்கு தொடர்சி மலைகள் அமைந்துள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சலாறு அணை, சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவை முக்கிய நீராதாரங்களாக அமைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணையின் நீரை கொண்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் குடிநீர் தேவையும் வைகை ஆற்றின் நீரை கொண்டு பூர்த்தி செய்யப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,130 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இந்த தண்ணீரை அணையில் இருந்து மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் சேர்ந்து திறந்து வைத்தார். திறக்கப்படும் இந்தத் தண்ணீரின் மூலம் பெரியார் பாசனப்பகுதியின் கீழ் உள்ள 85 ஆயிரத்து 563 ஏக்கர் விவசாய நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கர் விவசாய நிலங்கள் என மொத்தம் 1லட்சத்து 5 ஆயிரத்து 8 ஏக்கர் விவசாய நிலங்கள் திண்டுக்கல் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பாசன வசதி பெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேனி மாவட்ட சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இந்த தண்ணீர் திறப்பிற்காக வைகை அணை மதகுபகுதிக்கு மேல் உள்ள அபாய சங்கில் வைகை கரோயோர மக்களுக்கு மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை ஒலியும் எழுப்பப்பட்டுள்ளது.





















