Chithirai Thiruvizh: உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
மீனாட்சியம்மன் கோவில்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 8ஆம் நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும், 9ஆம் நாள் நிகழ்வாக நேற்றிரவு இரவு திக் விஜயமும் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் 10ஆம் நாள் நிகழ்வான விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் இன்று அதிகாலை அழகிரிசாமி நாயுடு, சூறாவளி சுப்பையா, கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வலம் வந்தனர் . அப்போது திருக்கல்யாண மேடையில் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டது.
திருக்கல்யாணம்:
இதையடுத்து முத்துராமய்யர் மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் கன்னி ஊஞ்சலாடிய பின் கோவில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களாலும், பச்சரியாலும், நவதானியங்களாலும் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் தனி தனியாக எழுந்தருளினர். முன்னதாக புதிருக்கல்யாண மேடையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் பின்னர் மீனாட்சியம்மனும் சுந்தேரசுவரரரும் மேடைக்கு வந்த பின்னர் பவளகனிவாய் பெருமாளும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளினர்.
திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மனின் வலதுபுறம் பவளகனிவாய் பெருமாளும் சுந்தரேசுவரரின் இடது புறம் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடனும் எழுந்தருளினர். தொடர்ந்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி மற்றும் அம்மனின் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு ரக்சாபந்தன் எனப்படும் காப்புகட்டிய பின்னர் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்புகட்டும் வைபவமும் அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.
தொடர்ச்சியாக மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மணப்பட்டு சாற்றும் நிகழ்வு நடைபெற்றதையடுத்து கோவில் சார்பில் சுந்தரேஸ்வரருக்கு பட்டு பீதாம்பரமும், அம்மனுக்கு பட்டுச்சேலைகளும் சாத்தப்பட்டது. இதனையடுத்து தனது தங்கையான மீனாட்சியம்மனை பவளகனிவாய் பெருமாள் தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றதையடுத்து.
வைரத்தாலான மங்கல நாண்
இதனைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ரிஷப லக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக கோலகலமாக நடைபெற்றது. அப்போது கோவிலில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோசம் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றவுடன் பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துகொண்டனர்.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வை தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. திருக்கல்யாணத்தின் போது மட்டுமே அம்மன் உற்சவத்திற்கு தங்க அங்கி அணிவிக்கப்படும் அப்போது 1823 ஆம் ஆண்டு முன்னோர்களால் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தீபாரதனை தட்டு மூலமாக அம்மனுக்கும் சுவாமிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தங்கத்தாலான 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சந்தன கும்பா மற்றும் பன்னீர் தெளிப்பு கும்பா மூலமாக சுவாமிக்கும் அம்மனுக்கும் பன்னீர் தெளிக்கப்பட்டது.
திருக்கல்யாணத்தையடுத்து கோவிலை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு தாலிக்கயிறும் , குங்குமம் வழங்கப்பட்டது. முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 30 லட்சம் மதிப்பிலான 10 டன் வண்ண மலர்கள் குறிப்பாக மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டும், மேலும் 500 கிலோ பழங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, நவ தானியங்களால் செய்யப்பட்ட பெயர்ப்பலகைகளால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.