(Source: ECI/ABP News/ABP Majha)
Arikomban Elephant: போக்கு காட்டி வரும் அரிக்கொம்பன் யானை - தீவிர கண்காணிப்பில் வனத்துறை
யானை நடமாடும் பகுதியில் யானைக்கு உணவாக அரிசி மற்றும் பலாப்பழங்களை வைத்தனர். தற்போது இவர்கள், வனத்துறையினருடன் சேர்ந்த யானையை கண்காணித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் காமயகவுண்டன் பட்டி மலையடிவார பகுதி அருகே சண்முகாநதி அணை பகுதியில் 3-வது நாளாக முகாமிட்டுள்ளது அரிக்கொம்பன் யானை, அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் 4வது நாளாக இன்று வரையில் முகாமிட்டுள்ளது. இந்த யானையை பிடிக்க அரிசி, பலாப்பழங்களை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தமிழக, கேரள எல்லையில் பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த 27-ந்தேதி அந்த யானை யாரும் எதிர்பாராத நிலையில் கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. பின்னர் அங்கிருந்து சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி வழியாக சென்று சண்முகாநதி அணை பகுதியில் முகாமிட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அரிக்கொம்பன் அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக ராயப்பன்பட்டியை அடுத்த சண்முகாநதி அணை பகுதியிலேயே யானை முகாமிட்டுள்ளது. அப்போது மலையடிவார தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இதையொட்டி ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் யாரும் மலை அடிவார தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ராயப்பன்பட்டியில் இருந்து சண்முகநாதன் கோவில் செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது. தொடர்ந்து மலை அடிவார பகுதியிலேயே முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் அடம்பிடித்து வருகிறது. இரவு நேரங்களில் ஹைவேவிஸ் மலைப்பகுதி நோக்கி செல்லும் யானை, காலையில் மீண்டும் சண்முகாநதி அணை பகுதிக்கு வந்துவிடுகிறது. கடந்த 3 நாட்களாகவே அரிக்கொம்பன் இதுபோன்று போக்குகாட்டி வருகிறது.
இருப்பினும் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே அரிக்கொம்பன் யானையின் குணாதிசயங்களை கண்டறியவும், அதனை தொடர்ந்து கண்காணிக்கவும் நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களான பொம்மன், சுரேஷ், ஸ்ரீகாந்த், சிவா ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் நேற்று சண்முகநாதன் கோவில் பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அரிக்கொம்பன் யானையின் கால்தடம் குறித்து சண்முகாநதி அணை பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் யானை நடமாடும் பகுதியில் யானைக்கு உணவாக அரிசி மற்றும் பலாப்பழங்களை வைத்தனர். தற்போது இவர்கள், வனத்துறையினருடன் சேர்ந்த யானையை கண்காணித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்