‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் சென்னை கொண்டு செல்லப்பட்ட உடல் உறுப்புகள்...!
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உறவினர்கள் சம்மதத்துடன் இறந்தவரின் இதயம் மற்றும் நுரையீரலை உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முத்தரசன் மகன் சக்திகுமார் (வயது 19). உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் 2-வது ஆண்டிற்கான கல்வி கட்டணம் செலுத்துவதற்காக கடந்த 18ஆம் தேதி இவர், கல்லூரிக்கு சென்றுவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் கம்பத்திற்கு வந்து கொண்டிருந்தார். கம்பம்-புதுப்பட்டி புறவழிச்சாலை சந்திப்பில் உள்ள உணவு விடுதி அருகே வந்தபோது உணவு விடுதியில் இருந்து வெளியே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சக்திகுமார் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சக்திகுமாரின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் எடுத்துக்கூறினர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் சக்திகுமாரின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் தானமாக வழங்கப்பட்டது.
இறந்தவரின் உடல் உறுப்புகளை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் ’சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் அதிவிரைவாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு போக்குவரத்து காவல்துறையினரின் உதவியோடு இதயம், நுரையீரல் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மதியம் 12:30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் இதயம், நுரையீரல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், 1 சிறுநீரகம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
OPS Tweet : தொடங்குகிறதா தர்மயுத்தம் 2.0? அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பதிவிட்ட பரபரப்பு ட்வீட்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்