தேனி : ஆதரவாளர்களை பெருக்கும் ஓபிஎஸ்.. அடுத்த கட்ட நகர்வு என்ன?
தேனியில் ஆதரவாளர்களை பெருக்கும் ஓபிஎஸ். சசிகலா, ஓபிஎஸ் விரைவில் இணைந்து செயல்படவும், இபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பிரமாண்ட கூட்டம் நடத்தவும் ஓபிஎஸ் திட்டம்..!
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக சசிகலா அணி , ஓபிஎஸ் அணி , இபிஎஸ் அணி என பல்வேறு அணி உருவாகி அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, ஓபிஎஸ் உட்பட ஓபிஎஸ்சின் ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கியதும், அதே வேலையில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி உட்பட அவருடைய ஆதரவாளர்களை நீக்கியதும் நடந்துள்ளது. ஒபிஎஸ்ஸுக்கு எதிராக தேனியில் ஆர்பி.உதயகுமார் தலைமையில் நடந்த கூட்டமும், கூட்டத்தில் ஒபிஎஸ்க்கு எதிராக பேசப்பட்ட விமர்சனம் என தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தனது வலுவை காட்டியவாறு இருந்து வருகிறார்.
இந்த சூழல் நிலவி வரும்போது அதிமுகவில் ஓபிஎஸ்க்கு ஆதரவாளர்கள் குறைந்த அளவே உள்ளதாகவும், ஒபிஎஸ் அரசியலில் தனித்துவிடப்பட்டதாகவும், அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் பொதுக்குழு நடந்தது குறித்தும் கட்சியின் பைலா விதிப்படி பொதுச்செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியது என ஓபிஎஸ் தனது சட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
தேனி மாவட்டத்துக்கு வந்த டிடிவி.தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சமீபத்தில் வரவேற்பு அளித்தனர். மேலும் சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளதால், விரைவில் அவர்கள் இருவரும் சேர்ந்து கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்கள் என அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஆகியோரின் பட்டியலை தயாரித்து அவர்களை ஓபிஎஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். ஒவ்வொரு மாவட்டந்தோறும் ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களை திரட்டி பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தேனி அதிமுகவை சார்ந்த அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதே போல்தான் தேனி,பெரியகுளம் பகுதியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் தென்காசி , திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் அறிவித்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சுமார் 300-க்கு மேற்பட்டவர்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை திரட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். குறிப்பாக தான் தனியாளாக நின்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்பதை ஓ.பன்னீர் செல்வம் உணர்ந்துள்ளாராம். எனவே சசிகலாவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவும் அவ்வப்போது ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்