‘வீட்டு கடன் கட்டவில்லை’ ......வீட்டு சுவரில் எழுதிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - தேனி அருகே பரபரப்பு
தேனி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டு கடன் கட்டவில்லை என வீட்டு சுவரில் எழுதியதால் வீட்டு உரிமையாளர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த க.விலக்கு அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் பிரபு. இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டின் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று அங்குள்ள சுவற்றை பாா்த்து கொண்டிருந்தனர். அந்த சுவற்றில் வீட்டுக்கடன் கட்டவில்லை என்று எழுதப்பட்டிருந்தது.
இதற்கிடையே வீட்டில் இருந்த பிரபு, தனது குடும்பத்தினருடன் வெளியே வந்து பார்த்தார். அப்போது சுவற்றில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் நீங்கள் யாரும் சுவற்றில் எழுதினீர்களா என்று விசாரித்தார். ஆனால் அவர்கள் தாங்கள் எதுவும் எழுதவில்லை என்று கூறினர்.
அப்போது சம்பவத்தன்று இரவு சிலர் வந்து சுவற்றில் எழுதியதாக பிரபுவின் மகள் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில், நான் வசிக்கும் வீட்டின் பத்திரத்தை தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன்பெற்றேன்.
வாங்கிய கடனுக்கு முறையாக தவணை செலுத்தி முடித்து விட்டு ஆவணங்களை தரும்படி தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால் அவர்கள், இன்னும் ரூ.1.50 லட்சம் வரை கடன் தொகை பாக்கி உள்ளதாகவும் அவற்றை செலுத்திவிட்டு ஆவணங்களை வாங்கி செல்லும்படியும் கூறினர். மேலும் என்னுடைய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்து எனது மோட்டார் சைக்கிளை மீட்டேன்.
இந்த நிலையில் நான் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் எனது வீட்டுக்கு வந்த தனியார் நிதிநிறுவன ஊழியர்கள், வீட்டின் சுவற்றில் வீட்டுக்கடன் செலுத்தவில்லை என்று எழுதி விட்டு சென்றுள்ளனர். எனவே தனியார் நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தனியார் நிதி நிறுவன அலுவலர்களிடம் கேட்டபோது, பிரபு எங்கள் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் அடமான கடன் பெற்றார். பிரபு கடன் தவணையை சரியான நேரத்தில் செலுத்தாமல் ஒவ்வொரு மாதமும் தாமதமாகவே செலுத்தி வந்தார். இது தவிர கொரோனா காலகட்டத்தில் 7 மாதங்கள் தவணை செலுத்தவில்லை.
இதனால் எங்கள் தரப்பில் விதிக்கப்படும் அபராதம், வங்கி பரிவர்த்தனை சரிவர செயல்படுத்தாததால் விதிக்கப்பட்ட அபராத தொகை மற்றும் நிலுவையில் உள்ள மாதத் தவணை இவை அனைத்தும் தற்போது வரை பாக்கியுள்ளது. இதுகுறித்து எங்களது நிறுவனத்தில் நேரடியாக வந்து பேசும்படி பலமுறை நாங்கள் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர் வரவில்லை. தற்போது வரையில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பாக்கி உள்ளது. அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து தான் வீட்டு சுவற்றில் கடன் கட்டவில்லை என்று எழுதினோம் என்றார்.
இந்த நிலையில், வீட்டுக்கடன் கட்டவில்லை என சுவற்றில் எழுதி வைத்த தனியார் நிறுவன் ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.