தேனி: முல்லைப் பெரியாறு வெள்ளம் பேரழிவு! விவசாயிகள், மக்கள் பாதிப்பு - 30 ஆண்டுகளில் இல்லாத சோகம்!
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில்வெள்ளப்பெருக்கு. ஆற்றின் அருகே உள்ள வயல்வெளி மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரிதும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில்வெள்ளப்பெருக்கு. ஆற்றின் அருகே உள்ள வயல்வெளி மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரிதும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்து அதிக கனமழை பெய்ததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான சுருளிப்பட்டி நாராயண தேவன் பட்டி காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள மலைக் கிராம ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அதிக கன மழை பெய்ததால் முல்லைப் பெரியாற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீருடன் அதிக அளவில் தண்ணீர் வந்து முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடுதல் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆறு முழுவதும் தண்ணீர் நிரம்பி ஆற்றின் கரைக்கு மேல் உள்ள அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் கொண்ட வயல் பகுதி மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் புகுந்து செல்வதால் வாழைத் தென்னை மற்றும் காய்கறி தோட்டங்கள் அனைத்திலும் வெள்ள நீர் செல்வதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் சுருளிப்பட்டி ஆற்றின் கரையோரத்தில் தோட்டத்தில் இருந்த 40 ஆடுகள் ஆற்று நீர் அடித்துச் சென்றுள்ளது. இது போன்ற பல்வேறு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளது. குறிப்பாக முல்லை பெரியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் கடும் சேதத்தை கண்டிருப்பதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முல்லை பெரியாறு ஆற்றங்கரையோரமுள்ள வீரபாண்டி, உப்புக்கோட்டை, உத்தமபாளையம், பழனிசெட்டிபட்டியை கணபொழுதில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் திண்டாடினர். காலையில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த ஆற்றுநீர், பின்னர் வீடுகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டு, அங்கு அறுவடைக்கு தயாராகி இருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின. தென்னை, வாழை, சோள பயிர்களும் சேதமாகியுள்ளது. விஷ பாம்புகள், பூச்சிகள் போன்றவை திடீர் வெள்ளத்தில் அடித்து வரப்படுவதாகவும், குழந்தைகளை வைத்திருக்கும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
கம்பம்- சுருளிப்பட்டி சாலையில் முல்லைப் பெரியாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. பதினெட்டாம் கால்வாய், ஏகலூத்து ஓடைப் பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக கம்பம் மெட்டு காலனியில் உள்ள குடியிருப்புகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர். கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தேமடைந்துள்ளன. உத்தமபாளையம் ஞானாம்பிகை கோவில் அருகே ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், கூடலூரில் தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதாகவும், சிறுபுனல் மின் நிலையத்தில் சுற்றுச்சுவர் உடைந்ததன் காரணமாக தண்ணீர் உள்ளே புகுந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோழிகள், நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகி உள்ளன. மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.






















