தேனியில் கொரோனா பரவலை தடுக்க ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்ததில் முறைகேடு செய்தது அம்பலம்
சிறப்பு நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பரிந்துரை செய்துள்ளார்
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகமெங்கும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் பரவல் ஆரம்பித்த நிலையில், தமிழகத்திலும் அதன் எதிரொலி இருந்தது. அதனை தொடர்ந்து கொரோனாவின் வைரஸ் தமிழகத்தில் முதல் அலையாக பரவிய நிலையில் சில மாதங்களுக்கு பிறகு வைரஸ் பரவல் சற்று குறைய தொடங்கி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதிய உச்சத்தை அடைந்து இரண்டாம் அலையாக மாறியது.
Madurai Food Corner| மதுரையை கலக்கும் மஞ்சள் பை பரோட்டா.. அதிரடி விழிப்புணர்வும்.. அள்ளும் சுவையும்
கொரோனா வைரஸ் பரவிய முதல் அலையை விட இரண்டாவது அலையாக உருவெடுத்து பெரிய அளவில் குறிப்பாக தமிழகத்திலும் அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இதனை தடுப்பதற்கு மருத்துவ உபகரணங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடுகளும் ஏற்பட்ட சூழ்நிலை உருவானது. தமிழக-கேரள இரு மாநில எல்லை பகுதியாக இருக்கக்கூடிய தேனி மாவட்டத்தில் முதல் அலையை விட இரண்டாவது அலையில் வைரஸ் பரவல் அதிக அளவில் இருந்தது உண்மை. இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இதற்கு சுகாதாரத்துறை அரசு சார்பாக சுமார் ஒரு கோடி நிதி சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்து தேனி மாவட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிதியின் மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை நல மையங்கள் என அமைக்கப்பட்ட மையங்களுக்கு தேவையான முகக் கவசம், சானிடைசர் தேவையானவை மருந்து பொருட்கள் அதிகமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு ஒதுக்கிய சிறப்பு நிதியை முறையாக செலவு செய்யாமல் பல்வேறு அமைப்பினர் நன்கொடையாக வழங்கிய தடுப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்து வாங்கியது போல போலியான கணக்கு காட்டி பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக ஒரு புகார் எழுந்த நிலையில், நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும் தணிக்கை செய்யவும் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவின்பேரில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்குழுவினர் கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் போது ஒதுக்கிய சிறப்பு நிதிக்கான செலவு விவரங்கள் முழுமையாக தணிக்கை செய்துள்ளனர். இந்நிலையில் இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது தேனி மாவட்டத்தில் பணியாற்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் தேனி மாவட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளாக பணியாற்றிய சிலர் தற்போது வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட சிறப்பு நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பரிந்துரை செய்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்