தேனி மாவட்ட தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் - முழுவிவரம் இதோ...!
உற்பத்தி தொழில் தொடங்கிட 10 லட்சம் முதல் 5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவீத மானியம் மற்றும் 3% வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி
தேனி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலம் மானியத்தில் கடன் பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கிராம மற்றும் நகர்ப்புறங்களில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், சுயவேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழக அரசால் "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)" மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 103 தொழில் முனைவோர்களுக்கு 785.00 இலட்சம் அரசு மானியமாக வழங்க இலக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினரும், 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சிறப்புப்பிரிவினரும் (ST/ST, BC, MBC, பெண்கள், மாற்று பாலினத்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் துவங்க வங்கி கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பு/ ITI தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
தற்போது தமிழக அரசு தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு கல்வி தகுதியை தளர்த்தி பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனவும் அதிகபட்ச முதலீட்டு மானிய தொகையை ரூ.50.00 லட்சத்திலிருந்து ரூ.75.00 லட்சமாகவும் உயர்த்தியும், ஆதி திராவிடர்/பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
உற்பத்தி தொழில் தொடங்கிட ரூபாய் 10.00 லட்சம் முதல் ரூ.5.00 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவீத மானியம் (அதிகபட்சம் ரூபாய் 75.00 லட்சம்) மற்றும் 3% வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெற மாவட்ட தொழில் மையம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
எனவே, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழில் தொடங்கிட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் https://www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணபத்தினை பதிவேற்றம் செய்திடுமாறும், மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 89255 33998 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.