நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
தேனி மாவட்டத்தில் நாட்டுக்கோழிவளர்ப்பில் ஆர்வமுள்ள 10 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழக கால்நடை வளர்ப்போரை தொழில் முனைவோர் ஆக்கும் பொருட்டும், சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்திடும் பொருட்டும், நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2025-2026-ஆம் ஆண்டில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேனி மாவட்டத்தில் நாட்டுக்கோழிவளர்ப்பில் ஆர்வமுள்ள 10 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும் திறனும் கொண்ட பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50% மானியமாக பயனாளி ஒருவருக்கு ரு.1,65,625/-மாநில அரசால் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய கோழிக்குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50% மானிய விலையில் வழங்கப்படும். மீதமுள்ள 50% பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். பயனாளிகளுக்கு கோழிகொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து 100 மீட்டர் விலகி இருக்க வேண்டும்.
பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 % ஆதிதிராவிடர்/பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கட்டுமானப்பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம், வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி சான்று ஆகியவற்றுடன் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் 26.06.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.





















