தேனியில் கனமழை எதிரொலி: படிப்படியாக உயரத் தொடங்கி உள்ள வைகை அணை நீர்மட்டம்...!
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் குறைந்து வந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கி உள்ளது
மேற்கு தொடர்சி மலைகள் அமைந்துள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சலாறு அணை, சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவை முக்கிய நீராதாரங்களாக அமைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணையின் நீரை கொண்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது மேலும் மதுரை மாநகரின் குடிநீர் தேவையும் வைகை ஆற்றின் நீரை கொண்டு பூர்த்தி செய்யப்படுகிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த ஜூன் மாதம் இறுதி வரையில் 68 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு முற்றிலும் குறைந்து போனது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்ஆதாரமாக இருந்த நிலையில் முல்லை பெரியாறு அணையிலும் நீர்வரத்து குறைவானதால் வைகை அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இந்த நிலையிலும் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கடந்த ஒரு மாதத்தில் 15 அடி வரை குறைந்து 53 அடியாக நீர்மட்டம் இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை முதல் 1000 கனஅடியில் இருந்து 1,859 கன அடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 719 கன அடியாக குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 54.33 அடியாக உள்ள நிலையில் அணையின் நீர் இருப்பு 2,612 மில்லியன் கன அடியாக உள்ளது. அணைக்கு 1859 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து 719 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 142 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.10 அடியாகவும், அணையில் உள்ள நீரின் அளவு 4288 மில்லியன் கன அடியாகவும் உள்ள நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு 2205 கன அடியாகவும், அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது 1300 கன அடியாகவும் உள்ளது.