திண்டுக்கல் : தீயில் கருகி பள்ளி மாணவி மர்ம மரணம்.. இரண்டாவது நாளாக போலீசார் தீவிர விசாரணை
5-ஆம் வகுப்பு சிறுமி மர்மமான முறையில் எரிந்து இறந்து கிடந்தது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2-வது நாளாக தீவிர விசாரணை நடந்துவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பாச்சலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்,மேலும் இந்த பள்ளியில் 3 ஆண் ஆசிரியர்கள், 3 பெண் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் 10-க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர், இந்நிலையில் பாச்சலூர் கிராமத்தில் சத்யராஜ்,பிரியதர்சினி தம்பதியினருக்கு 2 பெண்குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது, முதல் குழந்தை தர்ஷினி 6-ஆம் வகுப்பும், இரண்டாவது மகள் பிரித்திகா 5-ஆம் வகுப்பும், மகன் 1-ஆம் வகுப்பும் இதே பள்ளியில் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் இந்த மூன்று குழந்தைகளும் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளனர்,
பள்ளியில் நேற்று காலை 10.30 மணி இடைவெளிக்கு இரண்டாவது குழந்தையான பிரித்திகா பள்ளியின் கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது, மதிய உணவு இடைவெளி வரை சிறுமி வகுப்புக்கு திரும்பி வராமல் இருந்ததால்,அவரது சகோதரி இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார், அப்போது ஆசிரியர்கள் போய் தேடு என்று அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து பள்ளி வளாகத்தில் சகோதரி சுமார் அரை மணிநேரமாக தேடி கிடைக்காத காரணத்தினால் மனமுடைந்து,வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தனது தங்கையை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பள்ளியின் வளாகத்திற்கு பின் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிரித்திகா(10) புல் வெளிப்பகுதியில் கிடந்துள்ளார், இதனை பார்த்த அந்த சிறுமி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த வந்த தந்தை சத்யராஜ் எரிந்த நிலையில் கிடந்த தனது மகளை மீட்டு ஓட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் ,
கொண்டும் செல்லும் வழியிலேயே மாணவி இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் இறந்த மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது, இதனிடையே மாணவியின் உறவினர்கள் அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து உடல் கருகி சிறுமி இறந்து கிடந்த இடத்தில் தீப்பெட்டி, பெட்ரோல் கேன், மாணவியின் காலணி புதருக்குள் கிடப்பது மற்றும் மாணவியின் உடலை மீட்கும்போது வாயில் துணியை வைத்து மூடியுள்ளதாக கூறி, மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து கொடைக்கானல் தாண்டிக்குடி ஓட்டன்சத்திரம் மலைச்சாலையில் நேற்று மாலை வேளையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாண்டிக்குடி காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியர் முருகேசன் பள்ளி வளாகத்திற்கு சென்று பணிக்கு வந்த 3 ஆண் ஆசிரியர்கள், சத்துணவு பெண் பணியாளர் உள்ளிட்ட நபர்களை தனித்தனியாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்,
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நேற்று பணிக்கு வந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை செய்யப்படும் என தெரிவித்த பிறகு அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் தாண்டிக்குடி காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தனி தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
இதனிடையே நேற்று உடல் கருகி இறந்த சிறுமியின் உடல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இது கொலை எனவும், குற்றவாளி கைது செய்த பின் உடலை வாங்குவதாக தெரிவித்து சிறுமியின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் 5-ஆம் வகுப்பு சிறுமி பயிலும் பள்ளி வளாகத்திலேயே உடல் கருகி இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் சிறுமியின் மரணம் குறித்து மர்மமான மரணம் என்று வழக்கு பதிவு செய்து நேற்று பள்ளிக்கு வருகை தந்த முருகன்- (தலைமை ஆசிரியர்), ராஜதுரை (ஆங்கில ஆசிரியர்), மணி வேல் (மாணவியின் வகுப்பு ஆசிரியர்) உள்ளிட்ட மூவரை தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒட்டன்சத்திரம் சார்பு ஆய்வாளர் வெங்கடாசலம் பாதுகாப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திண்டுக்கல் சரக காவல் துறை துணை தலைவர் விஜய குமாரி,மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரன் மற்றும் லாவண்யா உள்ளிட்டோர் பள்ளியின் அருகே வசிக்கும் குடியிருப்பு மக்களிடமும்,பள்ளி மாணவிகளிடமும் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி மர்மமான இறந்த பாச்சலூர் பள்ளி வளாகப்பகுதிகளில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது, தடயவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
”மாணவியின் மர்ம மரணம் குறித்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடிக்கு உட்பட்ட பாச்சலூர் கிராமத்தில் உடல் எரிந்த நிலையில் சந்தேக மரணம் அடைந்த சிறுமி குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுவருகிறது. தடயவியல் நிபுணர்களை வைத்து தடயங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று நடைபெற்ற சிறுமியின் உடற்கூறு ஆய்வில் சிறுமியின் உடலில் தீக்காயங்கள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் வேறு காயங்கள் இல்லை இது குறித்து முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் காவல்துறையினர் பள்ளி ஆசிரியர்கள், அப்பகுதி பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடமும் சிறுமி சந்தேக மரணம் குறித்து பாச்சலூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருவதாக” திண்டுக்கல் சரக காவல் துறை துணை தலைவர் விஜயகுமாரி பாச்சலூரில் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.