பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் ஊழலை விசாரிக்க போதிய காவலர்களை ஒதுக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்
உயரதிகாரிகள் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையின் குரூப் A மற்றும் குரூப் B அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்
டேவிட் லியோ தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் .இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் போதுமான எண்ணிக்கையில் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழுக்களை அமைத்து தரவுகளை உரிய முறையில் சேகரித்து ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*அரசின் துறைகளில் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க போதுமான அளவில் காவல்துறையினரை ஒதுக்க தமிழக காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*உயரதிகாரிகள் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையின் குரூப் A மற்றும் குரூப் B அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அது அவர்களின் பணிப்பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும். முறைகேடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
*பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதுவும் பள்ளிக்கல்வித்துறையின் ஊழல்களை குறைக்க பெருமளவில் உதவும்.
*ஊழல் முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் ஏற்பட்டால் அவை குறித்த விபரங்களை முறையாக சேகரித்து ஊழலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
குழந்தையின் இறப்பிற்கும் 20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு - தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில் தர உத்தரவு
ராமேஸ்வரத்தை சேர்ந்த நந்தினி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இருப்பினும் மீண்டும் கருவுற்றேன்.
இந்நிலையில் கடந்த 2021 டிசம்பர் 17ம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் ஆண் குழந்தை பிறந்தது. தொப்புள்கொடியை மட்டுமே கத்தரித்த செவிலியர்கள், வேறு எந்த மருத்துவ சிகிச்சையையும் எனக்கோ, எனது குழந்தைக்கோ வழங்கவில்லை. இதன் காரணமாக குழந்தை 20ஆம் தேதி உயிரிழந்தது.எனவே, முறையாக கருத்தடை சிகிச்சை செய்ய தவறியது மற்றும், எனது குழந்தையின் இறப்பிற்கு இழப்பீடாக 20 லட்சம் ரூபாயை வழங்கவும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் வழக்கு குறித்த தமிழக சுகாதாரத்துறை செயலர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முதல்வர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.