மேலும் அறிய
Sivagangai lockup death : எங்களுக்கு தேவை நீதி, நிவாரணம் இல்ல... அஜித்குமாரின் சகோதரர் சொல்வது என்ன ?
இது போலச் சம்பவம் மற்றவர்களுக்கு நடைபெறக்கூடாது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு உள்ள அந்த ஆறு போலீசார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். - எனவும் தெரிவித்தார்.

உயிரிழந்த அஜித்தின் சகோதரர்
Source : whats app
எங்களுக்கு நீதிதான் வேண்டும் எந்த நிவாரணமும் தேவை இல்லை இனி இது போன்ற நிகழ்வுகள் இனிமேலும் யாருக்கும் நடக்கக்கூடாது - உயிரிழந்த அஜித்தின் சகோதரர் பேட்டி.
காவல்துறையினர் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பா?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், அஜித் குமார் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அந்த கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் சென்றுள்ளனர்.
அப்போது தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும், அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கடுமையாக, விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது அஜித்குமார் வலி தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அஜித்தின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
நகை எடுத்து இருந்தால் தானே கொடுக்க முடியும்
அஜித் குமாரின் உடன் பிறந்த சகோதரர் நவீன் கூறுகையில்..,” நகை மாயமான வழக்கில் என்னையும் எனது சகோதரரையும் காவல்துறையினர் விசாரணை என்கிற பெயரில், திருப்புவனம் பைபாஸ் அருகே உள்ள ஒரு தனியார் தோப்பில் வைத்து இருவரையும் தனிமைப்படுத்தி, கடுமையாக சித்திரவதை செய்தார்கள்.
இருவரையும் மாறி மாறி லத்தியால் அடித்தார்கள். என் கண் முன்னே என் அண்ணனின் கைகளை கட்டி வைத்து அடித்தார்கள். எடுத்த நகையை உடனடியாக கொடுக்கச் சொல் எனக் கூறி அடித்தார்கள். நகை எடுத்து இருந்தால் தானே கொடுக்க முடியும். என்னை அடித்தால் என் அண்ணன் உண்மையை சொல்வார் எனக் கூறி, முட்டிக்காலில் அமரச் சொல்லி அடித்தார்கள். இந்த சித்திரவதை நடந்த பின், நான் வீட்டிற்கு வந்தபோது தான் என் அண்ணன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தேன்.
எங்களுக்கு நீதிதான் வேண்டும் எந்த நிவாரணமும் தேவை இல்லை
இது போலச் சம்பவம் மற்றவர்களுக்கு நடைபெறக்கூடாது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு உள்ள அந்த ஆறு போலீசார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்களுக்கு நீதிதான் வேண்டும் எந்த நிவாரணமும் தேவை இல்லை. அரசு வேலை பற்றிய எந்த உத்தரவாதமும் இதுவரை யாரும் தரப்படவில்லை. இது போன்ற நிகழ்வுகள் இனிமேலும் யாருக்கும் நடக்கக்கூடாது. என்பதே தமிழக முதல்வருக்கு நாங்கள் வைக்கும் உண்மையான கோரிக்கை” எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















