மேலும் அறிய
ராமநாதபுரம் ஆசிரியர் 15 ஆண்டு தொல்லியல் தேடல்: 200+ அரிய பொருட்கள் பல்கலைக்கழகத்திற்கு!
15 ஆண்டுகளாகக் கள ஆய்வு மூலம் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் கண்டெடுத்த 200-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களைத் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் ஒப்படைத்துள்ளார்.

பல்கைக் கழகத்தில் ஒப்படைப்பு
Source : whatsapp
15 ஆண்டுகளாகக் கண்டெடுத்த தொல்பொருட்கள் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையில் ஒப்படைப்பு.
15 ஆண்டுகளாகக் கள ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் வே. இராஜகுரு, அப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் பொறுப்பாளராக 2010 முதல் இருந்து வருகிறார். சிறு வயது முதல் தொல்லியல் மற்றும் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அவர், பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காகத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயின்றார். ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மேற்பரப்பாய்வு மூலம் தொல்பொருட்களை அவர் கண்டெடுத்திருக்கிறார். 'ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்' என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் பல புதிய தொல்லியல் களங்களையும், புதிய கல்வெட்டுகளையும் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். இவர் தான் கண்டெடுத்த தொல்பொருட்களைத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் பயன்பாட்டுக்காகத் துறைத் தலைவர் சுதாகர் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது:
அத்திரப்பாக்கத்தில் கிடைத்த பழைய கற்காலக் கருவி, கமுதி பகுதியில் கிடைத்த நுண்கற்காலக் கருவிகள், கிருஷ்ணகிரி, போகலூர், கீழக்கரை நத்தம் ஆகிய ஊர்களில் கிடைத்த புதிய கற்காலக் கருவிகள், கமுதி நரசிங்கம்பட்டியில் எடுக்கப்பட்ட தொப்புள் கொடி மற்றும் மார்பகக் குறியீடுகள் உள்ள பெருங்கற்கால ஈமத்தாழி ஓடுகள், அழகன்குளம், கொக்கரங்கோட்டை, ஓரியூர், மருங்கூர், போகலூர், கலையூர், கீழச்சீத்தை, வெள்ளாமறிச்சுக்கட்டி, கீழக்கரை நத்தம், சோழந்தூர், மரியராயபுரம் ஆகிய ஊர்களில் கிடைத்த இரும்புக் காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், மரியராயபுரம், கீழச்சீத்தை, குளத்தூர், போகலூரில் கிடைத்த குறியீடு உள்ள பானை ஓடுகள்,
கடல் உயிர்களின் படிமங்கள்
அழகன்குளம், கீழச்சீத்தை, மரியராயபுரத்தில் கிடைத்த ரோமானிய அரிட்டைன், ரௌலெட் பானை ஓடுகள், சுந்தரபாண்டியன்பட்டினம், மேலமடை, பனைக்குளம், சோழந்தூர், திருப்புல்லாணியில் கிடைத்த சீன நாட்டு போர்சலின், செலடன் வகை பானை ஓடுகள், மதுரை மாவட்டம் கோபால்சாமிமலை, கொக்கரங்கோட்டை, கலையூர் ஆகிய பகுதிகளில் கிடைத்த கல்லாலான வட்டச் சில்லு, இரும்பு உருக்காலை, இரும்புக் கசடுகள், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிடைத்த கல்லாலான அரைப்புக் கருவிகள், மதுரை மாவட்டம் மாங்குளம், விருதுநகர் மாவட்டம் களத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம், ஓரியூர், செங்கமடை, தென்காசி மாவட்டம் வீரசிகாமணி போன்ற ஊர்களில் கிடைத்த சங்க காலம் முதல் கி.பி. 13-ம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த செங்கற்கள், அரியலூரில் கிடைத்த கடல் உயிர்களின் படிமங்கள் போன்றவை இதில் உள்ளன என்று கூறினார்.
புடைப்புச் சிற்பம்
துறைத்தலைவர் சுதாகர் கூறியதாவது, "முதுமக்கள் தாழியில் பொறிக்கப்பட்ட பெண்ணின் மார்பகப் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என இருநூறுக்கும் மேற்பட்ட அரிய தொல்பொருட்களைத் தமிழகமெங்கும் ஆசையாகச் சேகரித்து எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளார். இந்தத் தொல்லியல் எச்சங்களை எல்லாம் மொத்தமாகப் பார்த்த பல்கலைக்கழகத் தொல்லியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இராமநாதபுரத்தில் இருந்து தன் சொந்தச் செலவில் இவைகளை எல்லாம் எடுத்து வந்து கொடுத்த திரு. இராஜகுருவிற்கு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
மனதாரப் பாராட்டு
இந்நிகழ்வில் தொல்லியல் ஆர்வலர் நூர்சாகிபுரம் சிவகுமார் மற்றும் மாணவ, மாணவியர்களும் பேராசிரியர்களும் உடனிருந்தனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் கூறியதாவது, "இராஜகுரு தன் சொந்த முயற்சியில் கள ஆய்வு மூலம் தொல்லியல் சார்ந்த பொருட்களைக் கண்டெடுத்துள்ளார். இதற்கு நிச்சயமாகக் கடுமையான உடல் உழைப்பு மற்றும் பெரும் பணச் செலவும் ஏற்பட்டிருக்கும். இப்படிக் கிடைத்த இருநூறுக்கும் மேற்பட்ட அரிய தொல்லியல் எச்சங்களை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைக்கு அளித்துள்ளது எங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," எனக் கூறி இராஜகுரு அவர்களை மனதாரப் பாராட்டினார்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















