சசிகலா வருகையா...! முக்குலத்தோர் எதிர்ப்பா...! - தேவர் குருபூஜையை புறக்கணிக்கிறாரா எடப்பாடியார்...?
''அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது''
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தேவர் பிறப்பிடமான பசும்பொன்னில் 28, 29, 30 ஆம் தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் 59 ஆவது குருபூஜை மற்றும் 114 வது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு பணியில் 8,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணிக்காக பல மாவட்டங்களில் இருந்து அழைக்கப்பட்டுள்ள போலீசார் ஆங்காங்கே தங்கும் விடுதிகளில் உள்ளனர். இவர்களில் 12 பட்டாலியன் போலீசாரும் உள்ளனர். மாவட்ட எல்லைகள்உட்பட பதற்றமான பகுதிகளாக கண்டறிப்பட்ட 39 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8 சோதனை சாவடிகளில் அதிநவீன கேமராக்கள், கணினி வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் சி.சி.டி.வி., பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் ட்ரோன் பறக்கவிடப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதிமுக சார்பில், தேவர் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 4.5 கோடி மதிப்பில் 13.7 கிலோ எடையுள்ள தங்க கவசம் அதிமுக சார்பில் அணிவித்தார். இந்த கவசமானது, வருடா வருடம் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவின் போது அணிவிக்கப்பட்டு பின்னர் மதுரையில் வங்கி பெட்டகத்தில் மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த ஆண்டுக்காக இன்று தங்க கவசம் மதுரை வங்கிப் பெட்டகத்திலிருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தேவர் நினைவலய பொறுப்பாளர் காந்திமீனாள் முன்னிலையில் மதுரையில் பெறப்பட்டு பசும்பொன் எடுத்துவரப்பட்ட தங்ககவசம் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. தங்க கவசத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருடந்தோறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும், கொரானா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி குருபூஜைக்கு வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டும் வழக்கம் போல தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வருகை தர உள்ளனர்.
இதில் முக்குலத்தோரிடம் அபரிமிதமான செல்வாக்குப் பெற்றுள்ள வி.கே.சசிகலா கடந்த காலங்களில் சிறையில் இருந்த சமயங்கள் தவிர, மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதா பசும்பொன் வந்த போதெல்லாம் அவர் உடன் வருகை தந்தார். ஆனால், இந்தாண்டு, அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என அதிமுகவினர் கூறிவரும் நிலையில், தனது செல்வாக்கை அவர்களுக்கு நிரூபித்துக் காட்டும் கட்டாயத்தில் அவர் இருக்கிறார். தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் செய்யும் அவர், குருபூஜையில் கலந்துகொள்ள சசிகலா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார்.
அதேபோல, கடந்த ஆண்டு தேவர் குருபூஜையின்போது முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிச்சாமி பசும்பொன்னுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல் முதல்வர் பதவியில் இல்லாவிட்டாலும், இந்த ஆண்டும் அவர் வருவதாக முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சசிகலா 29ஆம் தேதி பசும்பொன்னுக்கு வருவதற்காக அனுமதி கேட்டு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருப்பதை தொடர்ந்து தற்போது அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலாவின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை, அவருக்கு அதிமுகவில் ஒருபோதும் இடம் இல்லை என தெரிவித்ததோடு ’சூரியனை பார்த்து’ என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்தப்பேச்சுக்கு தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் மத்தியில் அவருக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதனால் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ஓபிஎஸ் மற்றும் சசிகலா சந்திப்பு குருபூஜையில் நடைபெறும் என அதிமுகவிலிருந்து நீக்கபட்ட புகழேந்தி வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்பது, அவர் தேவர் குருபூஜையை புறக்கணிக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது. மேலும் சசிகலாவும் ஓபிஎஸ்சும் சந்தித்து பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே அதிமுகவில் இரட்டை தலைமை என்பது அவ்வப்போது சிறுசிறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சி ஒரு தலைமையின் கீழ் இயங்க, தென் மாவட்ட அதிமுகவினர் அதிமுகவினர் ஏற்றுக் கொள்வார்களோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
'நெருங்கும் கைகள்'
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது விலகியிருந்த கைகள் மீண்டும் நெருங்குவது போலவே பார்க்கப்படுகிறது.