’மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று’- கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்...!
’’இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடல் பகுதி சுமார் 500 மீட்டருக்கும் மேலாக உள்வாங்கியது. இதனால் அப்பகுதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய நாட்டுப்படகுகள் தரைதட்டியது’’
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ முதல் 55 கி.மீ வரை சூறைக்காற்று வீசி வருவதின் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியான பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய கடலோர பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் வேகம் அதிகமாக இருப்பதால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், ஆங்காங்கே போடப்பட்டிருந்த பந்தல்கள் காற்றில் பறக்கின்றன.
தென்னை மரங்கள், வாழை மரங்கள் இந்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வளைந்து அங்கும், இங்குமாக அசைந்து ஆடுகிறது. சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றின் வேகம் இருக்கிறது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிசோடி காணப்படுகிறது. வாகனங்களும் அந்த பகுதிகளில் மெதுவாக சென்று வருகிறது. வாகன ஓட்டிகள் ஏதாவது ஆகி விடுமோ? என ஒருவித பயத்துடனேயே தங்களுடைய வாகனத்தை இயக்கி வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்:
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்று 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் வீசியதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதனால் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடல் பகுதி சுமார் 500 மீட்டருக்கும் மேலாக உள்வாங்கியது. இதனால் அப்பகுதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய நாட்டுப்படகுகள் தரைதட்டியது. மேலும் சில படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளது. தரைதட்டிய நாட்டு படகுகளை மீனவர்கள் மீட்டு கடலில் ஆழமான பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் கடல் உள்வாங்கியதால் கடற்கரையோரங்களில் வசிக்கக்கூடிய அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான நட்சத்திர மீன், கடல் அட்டை உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்து வருகின்றன. இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ராமேஸ்வரத்தில் தூண்டில் வளைவுகளுடன் கூடிய துறைமுகம் அமைத்து தர வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.