டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் நவ.11ஆம் தேதி வேலை நிறுத்தம்-ராமநாதபுரம் மீனவர்கள் அறிவிப்பு
’’11ஆம் தேதியில் இருந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் செய்யவும்; 15ஆம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் திட்டம்’’
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தற்போது ராமேஸ்வரத்தில் ஒரு லிட்டர் டீசல் 102 ரூபாயை தொட்ட நிலையில் மீனவர்கள் அதை வாங்கி கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமல் ஒவ்வொரு முறை கடலுக்கு சென்று வரும்போதெல்லாம் நஷ்டத்தை சந்திப்பதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதில் இலங்கை கடற்படையின் தொடர் தொல்லை வேறு, இதனால் உடமைகளையும் உயிரையும் இழந்து வருகின்றனர்.
மேலும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வினால் கடந்த 9.10.21 முதல் தற்போது வரை மீனவர்கள் டீசல் விலை உயர்வினால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு கடல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். தமிழக அரசு மானிய முறையில் விசைப்படகுகளுக்கு 1800 லிட்டர் டீசல் கொடுத்தாலும், அந்த மானிய டீசலும் 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மானிய முறையில் கொடுக்கப்படும் டீசல் ஒரு கடல், இரண்டு கடலுக்கு செல்வதற்கு சரியாகி விடுவதாகவும் அதனை வாங்கி கடலுக்கு சென்றாலும் தங்களுக்கு எந்த லாபம் கிடைப்பதில்லை என்பது மீனவர்களின் கவலையாக இருக்கிறது.
இந்த நிலையில்,தமிழக கடலோர அனைத்து மீனவர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் பாரதிநகரில் நடந்தது. மாநில நிர்வாகி ஜேசுராஜா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நாகை, கன்னியாகுமரி தூத்துக்குடி, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தின் வாயிலாக, மேலும், டீசல் உயர்வால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படங்களும் வாழ்வாதாரமின்றி போனதால், வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும், இலங்கை இந்தியா இடையே பாரம்பரியமான இடத்தில் மீன் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டதை உடனடியாக நிறைவேற்ற வேணடும் எனவும், மீன்வள மசோதாவை தடை செய்ய வேண்டும் என்றும், மீனவர்கள் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழக முதல்வர் மீனவர்களின் இந்த கோரிக்கைகளை வருகின்ற 10 ஆம் தேதிக்குள் நேரடியாக அழைத்து பேச்சுவார்த்தை மூலம், தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் தாங்கள் பிரச்சினையில்லாமல் மீன் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும், இல்லையென்றால் வருகின்ற 11ஆம் தேதியிலிருந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் தமிழகம் தழுவிய வேலைநிறுத்தம் செய்வோம், மேலும் வருகின்ற 15ஆம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.